×

எஸ்பிஐ வங்கியில் ரூ.89 கோடி மோசடி விவகாரம் தங்கம் ஸ்டீல் நிறுவனம், உரிமையாளர் வீடுகளில் சிபிஐ அதிரடி ரெய்டு: முக்கிய ஆவணங்கள் சிக்கியது

சென்னை: எஸ்பிஐ வங்கியில் ரூ.89 கோடி மோசடி செய்த விவகாரம் தொடர்பாக, தங்கம் ஸ்டீல் நிறுவனம், உரிமையாளர் வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. இதில், முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அண்ணாநகரை தலைமையிடமாக கொண்டு தங்கம் ஸ்டீல் லிமிடெட் என்ற பெயரில் இரும்பு உருக்கு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு பல்வேறு இடங்களில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்நிறுவனத்தின் இயக்குநர் பி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, தங்கம் ஸ்டீல் லிமிடெட் நிறுவனத்தின் ஆவணங்களை வைத்து எஸ்பிஐ வங்கியில் ரூ.102 கோடி கடன் பெற்றுள்ளார். இந்த கடனில் ரூ.13 கோடியை மட்டுமே வங்கியில் திருப்பி செலுத்தியதாக கூறப்படுகிறது.

மீதமுள்ள கடன் தொகையான ரூ.89 கோடியை செலுத்தாமல் இருந்துள்ளார். வங்கி நிர்வாகம் சார்பில் பலமுறை சம்மன் அனுப்பியும், அவர் கடன் தொகையை செலுத்தவில்லை. மேலும், எந்த விதமான பதிலும் அளிக்காமல் இருந்துள்ளார்.
இந்நிலையில், கடன் பெறுவதற்கு அவர் வங்கியில் அளித்த ஆவணங்களை சரிபார்த்த போது அவை அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. இதையடுத்து கடந்த 20ம் தேதி வங்கியின் உதவி மேலாண் இயக்குநர் ரவிச்சந்திரன் சிபிஐயில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், தங்கம் ஸ்டீல் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்த மேலும் 2 பேர் மீது மோசடி, கூட்டுசதி, போலி ஆவணங்கள் தயாரித்தல் ஆகிய 6 பிரிவுகளின் வழக்குபதிவு செய்தனர்.

அதை தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் அண்ணாநகரில் உள்ள கிருஷ்ணமூர்த்தியின் வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று சோதனை நடத்தினர். அதேப்போல், மின்ட் தெருவில் உள்ள தங்கம் ஸ்டீல் நிறுவனத்திலும் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் மோசடி தொடர்பாக முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தங்கம் ஸ்டீல் இயக்குநர் கிருஷ்ணமூர்த்தியிடம் நள்ளிரவு வரை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும், கொரோனா காலத்திலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : SBI Bank , SBI Bank, Rs 89 Crores, Fraud, Gold Steel, Owner's House, CBI Action Raid
× RELATED புதுவையில் 5 பேரிடம் ₹7.68 லட்சம் மோசடி