×

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலையில் இன்ஸ்பெக்டர் தப்பமுயன்ற கார் பாஜ பிரமுகரிடம் ஒப்படைப்பு

தூத்துக்குடி: இன்ஸ்பெக்டர் தப்ப முயன்ற கார், பாஜ பிரமுகரிடம் ஒப்படைக்கப்பட்டது. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தேடப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் நெல்லையில் இருந்து தேனிக்கு காரில் தப்பிச் செல்ல முயன்றபோது, போலீசார் கங்கைகொண்டான் செக்போஸ்ட்டில் மடக்கி கைது செய்தனர். அந்த கார் சென்னை முகப்பேரை சேர்ந்த, சென்னை மேற்கு மாவட்ட பாஜ அமைப்பு சாரா தொழிலாளர் சங்க செயலாளர் சுரேஷ்குமாரின் மனைவி பெயரில் இயங்கியது தெரியவந்தது. 2017ல் காரை கோயம்பேட்டை சேர்ந்த பாண்டியன் என்பவரிடம் வாடகைக்கு கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு அழைத்ததால் அசல் ஆவணங்களுடன் நேற்று தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகிய சுரேஷ்குமார் அதை சமர்ப்பித்துள்ளார். இதையடுத்து கார் அவரிடம் வழங்கப்பட்டது. இருப்பினும் கோயம்பேடு பாண்டியனிடம் கொடுக்கப்பட்ட சுரேஷ்குமாரின் கார் சென்னையில் இருந்து நெல்லைக்கு எப்படி வந்தது? அது இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

* காவலில் விசாரணை எப்போது?
தூத்துக்குடியில் சிபிசிஐடி ஐஜி சங்கர் நேற்று அளித்த பேட்டி: ‘சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கையாக, கொரோனா பணிக்கு தன்னார்வலர்களாக பணியாற்றிய பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை சேர்ந்த 5 பேரிடம் விசாரனை நடத்த உள்ளோம். மேலும் இவ்வழக்கில் கைதான 5 பேரையும் காவலில் எடுக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, நீதிமன்றம் அனுமதி வழங்கிய உடன் விசாரணை நடத்தப்படும்’ என்றார். இதனிடையே இவ்வழக்கு தொடர்பாக பென்னிக்ஸின் நண்பர்கள் சிலர் நேற்று 2வது நாளாக தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்திற்கு வந்து சாட்சியம் அளித்தனர். இதுதவிர சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீசாக பணியாற்றிய சிலரும் சிபிசிஐடி விசாரணைக்கு நேரில் ஆஜராகினர். மேலும் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றி தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ள போலீசார் 5 பேரும் நேற்று சிபிசிஐடி அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.


* வியாபாரிகள் குடும்பத்துக்கு ஜி.கே.வாசன் ரூ.3 லட்சம் நிதி
த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் எம்பி நேற்று சாத்தான்குளம் வந்து, வியாபாரி ஜெயராஜ் வீட்டிற்கு சென்று அவரது மனைவி செல்வராணி மற்றும் குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறினார். கட்சி சார்பில் ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்கினார். பின்னர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறுகையில், ‘ஜெயராஜ், பென்னிக்ஸ் விவகாரத்தில் விசாரணை சரியான முறையில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள். இந்த குடும்பத்திற்கு நீதி கிடைக்க எப்போதும் நாங்கள் துணை நிற்போம். நீதிமன்றம் மற்றும் தமிழக அரசின் செயல்பாடுகள் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கின்ற வகையில் இருப்பதால் தான் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படும் நிலையில் உள்ளனர். ஒரு சில காவல்துறையினரின் தவறான அணுகுமுறையால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது’ என்றார்.

Tags : Inspector ,death ,Sathankulam Inspector , Sathankulam, Father, Son Murder, Inspector, Fugitive Car, Bajaj, Delivery
× RELATED காவலர்கள், அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்குப்பதிவு: அதிகாரிகள் ஆய்வு