ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே கொரோனா தடுப்பு பணிகளில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஒன்றியம் ராஜகோபாலன்பட்டி ஊராட்சியில் சீதாராம்தாஸ் நகர், ஜெ.ஜெ.நகர், சத்யா நகர் பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். சீதாராம்தாஸ் நகரில் இதுவரை 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 52 வயது பெண் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தார். இந்நிலையில் மேற்கண்ட பகுதிகளில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
அப்பகுதிகளில் உள்ள கால்வாய்கள் தூர்வாரப்படாததால், அவற்றில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் அப்பகுதிகளில் கிருமிநாசினி, பிளீச்சிங் பவுடர் தெளித்தல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், அப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் அப்பகுதியில் கொரோனா பரவும் அபாயம் நிலவுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே அப்பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள ஊராட்சி நிர்வாகத்துக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.