முதுமலையில் மான் கறி சமைத்த 9 பேர் கைது: ரூ. 1.80 லட்சம் அபராதம்

ஊட்டி: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு புலி, சிறுத்தை, காட்டுமாடு, யானை, பல்வேறு வகை மான்கள் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. காப்பு காடுகளுக்குள் அத்துமீறி நுழைவது வன குற்றமாகும். இ்ந்நிலையில் முதுமலை மசினகுடி வெளி மண்டலம், சீகூர் வனச்சரகத்திற்குட்பட்ட சிறியூர் வனப்பகுதியில் இறந்து கிடந்த சாம்பார் வகை மான் கறியை உணவிற்காக சிலர் வெட்டி எடுத்து செல்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில் வெளி மண்டல துணை இயக்குநர் ஸ்ரீகாந்த் தலைமையிலான வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.

அப்போது சிறியூர் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த 6 பேர், இறந்து கிடந்த மான் கறியை எடுத்து சென்று சமைத்ததும், அருகில் உள்ள 3 பேருக்கு மான் கறியை கொடுத்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து சிறியூர் கிராமத்தை சேர்ந்த லிங்கன், அருண், பசுவராஜ், கோபால், பண்டராஜ், ஆனைக்கட்டிைய சேர்ந்த பொம்மன், குரும்பர்பாடிைய சேர்ந்த குமார், மாதேஷ், ஓடக்கொல்லிைய சேர்ந்த பினு ஆகிய 9 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது வன பாதுகாப்பு சட்டத்தின் வழக்குபதிவு செய்யப்பட்டது.

குற்றத்தை ஒப்பு கொண்டதை தொடர்ந்து அவர்களிடம் தலா ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டதை தொடர்ந்து விடுவிக்கப்பட்டனர். இதேபோல் சிறியூர் வனப்பகுதியில் சந்தனமர வேர் கட்டைகளை தோண்டி எடுத்து, அதனை சிலர் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதன் பேரில் வனத்துறையினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் பொக்காபுரம் கிராமத்தை சேர்ந்த முகமது அலி, சிறியூர் கிராமத்தை சேர்ந்த சிவலிங்கன் ஆகியோர் சந்தனமர வேர் கட்டைகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனை தொடர்–்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் தலா ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.40 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

Related Stories: