×

சிவகங்கை மாவட்டத்தில் அதிகரிக்கும் பாஸ்ட்புட் கலாச்சாரம்: பல்வேறு நோய் தாக்கும் அபாயம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் பாஸ்ட்புட் (ஜங்க் புட்) ஓட்டல்கள், தள்ளுவண்டி கடைகள் அதிகரித்து வருகின்றன. இந்த உணவு கலாச்சாரத்தால் பல்வேறு நோய் தாக்குதல் ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, திருப்புத்தூர், காளையார்கோவில், மானாமதுரை, தேவகோட்டை, இளையான்குடி உள்ளிட்ட ஊர்களில் ஏராளமான பாஸ்ட்புட் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தூசியைக்கூட பொருட்படுத்தாமல் சாலையோரம் வெளிப்புறத்தில் நின்று சாப்பிடும் கலாச்சாரம், பாரம்பரிய உணவிலிருந்து மாறுபட்ட சுவை உள்ளிட்டவைகளால் இளைஞர்களிடம் இந்த வகை உணவு மற்றும் கடைகள் வரவேற்பை பெற்றுள்ளன.

சென்னை போன்ற பெரு நகரங்களில் மட்டுமே இருந்து வந்த இக்கடைகள் கடந்த சில ஆண்டுகளாக சிவகங்கை மாவட்டத்திலும் ஏராளமாக திறக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் பாஸ்ட்புட் ஹோட்டல்கள் தவிர, சுகாதாரமற்ற நிலையில் உள்ள சாலையோர கடைகளின் எண்ணிக்கை மட்டும் 500க்கும் மேல் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் பாஸ்ட்புட் உணவில் சுவை மற்றும் வாசனைக்காக பல கெமிக்கல் கலந்த பொருட்கள் உணவோடு கலக்கப்படுகின்றன. கடைகளில் விற்பனையாகாத நாட்கள் கடந்த இறைச்சியும் இதில் பயன்படுத்தப்படுகிறது.

கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி சிறு வயது குழந்தைகளும் இதன் சுவைக்கு மயங்கி இந்த உணவை தொடர்ந்து சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சுகாதாரமற்ற நிலையில் இருந்தாலும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இந்த கடைகளை கண்டு கொள்வதில்லை. தற்போது அதிகமாகி வரும் நோய் தாக்குதலுக்கு உணவு பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்பட்டதே காரணம் என கூறப்படுகிறது. பாஸ்ட்புட் உணவால் பல்வேறு நோயை நாமே விலை கொடுத்து வாங்குகிறோம் என மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்.

இதுகுறித்து அரசு சுகாதாரத்துறை இயக்குநர் ஒருவர் கூறுகையில், ‘நம்முடைய பாரம்பரிய உணவு வகையில் உள்ளதை போன்று ஆயிரக்கணக்கான மடங்கு கலோரி பாஸ்ட்புட் உணவு வகைகளில் உள்ளது. இந்த உணவில் கலக்கப்படும் சைனீஸ் சால்ட், வெனிகர் உட்பட அனைத்தும் கெமிக்கல் ஆகும். இதனால் கொழுப்புச்சத்து அதிகரிக்கும். இதை தொடர்ந்து சாப்பிடும் போது மாரடைப்பு, ரத்த அழுத்தம், அல்சர், டயரியா, சிறுவர்கள் தொடர்ந்து சாப்பிடுவதால் ஆண்மைக்குறைபாடு, சர்க்கரை நோய் ஏற்படும். பெண்களுக்கு மலட்டுத்தன்மை, குழந்தை பேறு பிரச்னை ஏற்படும். எனவே இந்த உணவை அறவே தவிர்க்க வேண்டும்’ என்றார்.

Tags : Sivaganga District , Sivaganga, Pastfoot, Culture, Disease
× RELATED தேவகோட்டை அருகே விபத்து: லாரி மோதியதில் வேன் கவிழ்ந்து 6 பேர் படுகாயம்