×

கொடுங்கையூர் பகுதியில் பாதுகாப்பு அமைக்காமல் உள்ள கொரோனா நோயாளிகளின் வீடுகள்...! புகார் அளித்தும் சுகாதாரத்துறை அலட்சியம்

கொடுங்கையூர் : கொடுங்கையூர் பகுதியில் கொரோனா பாதிக்கப்பட்டவரின் வீடு தடுப்புகள் மற்றும் பாதுகாப்பு அமைக்காமல் உள்ளது. இதுபற்றி சுகாதார துறை மற்றும் போலீசாரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் அலட்சிய போக்கில் உள்ளனர் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். சென்னை கட்டபொம்மன் 3-வது தெருவில் சுமார் 50 வயதுள்ள ஒருவருக்கு, கடந்த 1ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. சுகாதார துறையினர், அவரை மருத்துவ முகாமில் தங்க வைக்காமல், அவரது வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். அவரது வீட்டின் வெளியே, கொரோனா பாதிப்பு உள்ள வீடு. உள்ளே யாரும் செல்லக் கூடாது என்ற பதாகையை வைத்துள்ளனர்.

ஆனால் அவர், எந்நேரமும் வீட்டின் வெனியே உட்கார்ந்து கொண்டு, அவ்வழியாக செல்வோரிடம் பேசி கொண்டு இருக்கிறார். மேலும், தினமும் காலையில் பல் துலக்கி, முகம் கழுவுவதும் தெருவிலேயே நடக்கிறது. குறிப்பாக, அவரது சுமார் 80 வயதுள்ள அவரது தாயுடன், ஒரே அறையில் தங்கியுள்ளார். இதனால், அந்த மூதாட்டிக்கும் தொற்று பரவும் அபாயம் உள்ளது. வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு, அந்த மூதாட்டி, அடிக்கடி வெளியே கடைக்கு செல்கிறார். இதை பார்க்கும் அப்பகுதி மக்கள், மூதாட்டிக்கு பலமுறை அறிவுரை கூறியும் அவர் கேட்கவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அப்போது, ஒரு சிலர் மட்டும் வெளியே வந்து சென்றனர். அப்போது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர், சர்வ சாதாரணமாக சாலையில் சுற்றி திரிந்தார்.

இதனால், அப்பகுதி மக்கள் கடும் அச்சமடைந்தனர். இதையடுத்து, சுகாதார துறைக்கு தகவல் கொடுக்க போன் செய்தால், யாரும் எடுக்கவில்லை. இதையடுத்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்த பின்னர், கொடுங்கையூர் போலீசார், 9444308132 என்ற எண்ணில் இருந்து, புகார் அளித்த பொதுமக்களை தொடர்பு கொண்டு விசாரித்தனர். பின்னர், அங்கு வருவதாக கூறி இணைப்பை துண்டித்தனர். ஆனால், போலீசாரும் அங்கு வரவில்லை. எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேற்கண்ட தெருவில் 50க்கு மேற்பட்ட வீடுகளில் 150க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அதில், குழந்தைகள் முதல் முதியோர் வரையும், இருதயம், சர்க்கரை, ஆஸ்துமா உள்பட பல்வேறு நோயாளிகளும் உள்ளனர். அவர்களுக்கும் இந்த தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, சுகாதார துறை உயர் அதிகாரிகள், கொடுங்கையூர் கட்டபொம்மன் 3வது தெருவில், சம்பந்தப்பட்ட வீட்டுக்கு தகர ஷீட் அமைக்க வேண்டும். வீடு வீடாக சென்று அனைவரையும் சோதனை செய்ய என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : health department ,houses ,complainant ,Kodungaiyur ,Coronation , Kodungaiyur, Corona, Health Department
× RELATED அரசு மருத்துவமனைகளில் ஓஆர்எஸ் கரைசல்...