திருப்பத்தூரில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு!: பரிசோதனையின் போது முதியவர் மயங்கி விழுந்து பலி!!!

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் கொரோனா பரிசோதனை மையத்திலேயே 73 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனாவிற்காக உயிரிழந்த முதல் உயிரிழப்பாக இது பதிவாகியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது தமிழகத்திலும் அதிகளவில் பரவ தொடங்கியுள்ளது.

இந்த கொரோனா வைரஸின் தாக்கம் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா தொற்றால் சுமார் 363 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1830 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் திருப்பத்தூர் அடுத்த கொரட்டி கிராமத்தை சேர்ந்த குப்புசாமி என்கின்ற 73 வயது மதிக்கத்தக்க கோவில் அர்ச்சகருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குப்புசாமி வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாதாந்திர சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

அப்போது கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் குப்புசாமி அடுக்கம்பாறை மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு பின்னர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை அவருக்கு தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்த சுகாதாரத்துறை அதிகாரிகள் குப்புசாமியின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என திருப்பத்தூர் அடுத்துள்ள குனிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு குப்புசாமியின் சளி மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் போது திடீரென அவர் மழுங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் போதே முதியவர் உயிரிழந்த சம்பவம் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் மனஅழுத்தத்தில் முதியவர் உயிரிழந்தாரா? அல்லது அவருக்கு தொற்று அதிகமாகி மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தாரா என பல்வேறு கோணங்களில் மருத்துவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனாவிற்காக உயிரிழந்த முதல் உயிரிழப்பாக கோவில் அர்ச்சகர் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

Related Stories:

>