×

ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளிலேயே இருந்ததால் மின்கட்டணம் உயர்ந்துள்ளது : உயர்நீதிமன்றத்தில் மின்வாரியம் விளக்கம்!!

சென்னை : ஊரடங்கு காரணமாக மக்கள் 18-20 மணி நேரம் வீட்டில் இருப்பதால் கூடுதலாக மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசியத் தேவைகளைத் தவிர பிற அனைத்துச் சேவைகளும் முடக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கினர். இதனால் அவர்களின் பெருவாரியான நேரமானது வீட்டிலேயே கழிந்து வருகிறது. இதன் காரணமாக அவர்களின் மின்சார பயன்பாடும் முன்பை விட அதிகரித்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து பிரபலங்கள் உட்பட பொதுமக்கள் பலரும் ஊரடங்கு காலத்தில் தங்களது வீடுகளுக்கு மின்வாரியம் அதிக அளவு மின்கட்டணம் வசூலிப்பதாக குற்றம் சாட்டி இருந்தனர்.

இது தொடர்பாக எம்.எல்.ரவி என்பவர் தொடர்ந்து வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மின்வாரியம் மேற்கொள்ளும் மின்கட்டண கணக்கீடுப்படி பொதுமக்கள் கூடுதல் தொகை செலுத்த நிர்பந்திக்கப்படுவதாகக் கோரி, அதற்கான விலக்க மனு ஒன்று மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. ஊரடங்கு காரணமாக மக்கள் 18-20 மணி நேரம் வீட்டில் இருப்பதால் கூடுதலாக மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது என தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.  

இதையடுத்து தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மின்சார சட்ட விதிகளின்படி ஊரடங்கு காலத்தின் போது, முந்தைய மின்கட்டண தொகையை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே புதிய மின் கட்டணம் கணக்கீடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட மின்சார யூனிட் அடிப்படையில் கணக்கிட முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும் ஊரடங்கு காலத்தில் பொது மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருந்ததால் மின் கட்டணம் அதிகரித்துள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார். இதையடுத்து தமிழக அரசின் விளக்கத்தை எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்ய  உத்தரவிட்ட நீதிபதிகள்,விசாரணையை ஜூலை 8ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Tags : Homes , Curfew, People, Electricity, Rise, High Court, Power, Interpretation
× RELATED இல்லங்களில் இனிய வேல் பூஜை