×

கடலாடி-முதுகுளத்தூரில் சாலை நடுவே விபத்தை ஏற்படுத்தும் மரணமேடு: 3 பேர் பலியாகியும் கண்டு கொள்ளவில்லை

சாயல்குடி: முதுகுளத்தூர்-கடலாடி சாலையின் நடுவில் உள்ள மேட்டு பகுதியால் நாள்தோறும் விபத்து ஏற்பட்டு வருகிறது. 3 ஆண்டுகளில் 3 பேர் பலியாகியும் மாநில நெடுஞ்சாலை துறை கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். சாயல்குடி-தஞ்சாவூர் மாநில நெடுஞ்சாலை செல்லும் கடலாடி-முதுகுளத்தூர் சேதமடைந்த சாலைக்கு மராமத்துடன் கூடிய புதிய சாலை அமைக்கும் பணி கடந்த 2018ல் நடந்தது. சாலையின் ஓரம் காவிரி கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாய் செல்கிறது. தேவர் நகர் மின்வாரிய அலுவலகம் பேருந்து நிறுத்தம், தாலுகா அலுவலகம் இடைப்பட்ட இடத்தில் காவிரி கூட்டு குடிநீர் பிரதான குழாய் இடம்மாறி செல்கிறது.

இதனால் சாலையின் குறுக்கே குழாய் இருப்பதால், சாலையில் போக்குவரத்து செல்ல, செல்ல சாலை சேதமடைந்து விட்டது. சாலையோரத்தில் குழாயும் சேதமடைந்து விட்டது. இதனால் குழாயிலிருந்து குடிநீர் கசிந்து வெளியேறி வீணாகி வருகிறது. சேதமடைந்த இடத்தில் இரண்டாவது முறையாக 2019ல் மராமத்து பணி நடந்தது. இதனால் அந்த இடம் மட்டும் சாலையின் மட்டத்தை விட சற்று உயரமானது. கரடு முரடான இந்த மேடான இடத்தில் வெள்ளை நிற ஒளிரும் அடையாள முன்னெச்சரிக்கை கோடுகள், விபத்து பகுதி என்ற அறிவிப்பு பலகை, இரவில் ஒளிரும் விளக்கு போன்றவை அமைக்கப்பட வில்லை.

இதனால் மேடான பகுதியாக இருப்பதால் இச்சாலையின் வழியே வாலிநோக்கம் அரசு உப்பளத்திலிருந்து உப்புகளை ஏற்றி அதிக பாரத்துடன் லாரிகள், கருவேல மரம், கரி, கட்டுமான பொருட்கள் உள்ளிட்ட அதிக எடையுள்ள பொருட்களை ஏற்றி வரும் கனரக வாகனங்கள், பால் வண்டி, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர வாகனங்கள், பஸ் படிக்கட்டு மற்றும் சிறிய கார்களின் அடிப்பாகம் தட்டி வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டு வருகிறது.
வேகமாக வரும் வாகனங்கள் மேட்டு பகுதி தெரியாமல் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு, வாகனத்தில் இருப்பவர்கள் படுகாயமடைந்தும் வருகிறார். பள்ளி, கல்லூரி நாட்களில் சுற்றியுள்ள கிராம பகுதிகளிலிருந்து கடலாடிக்கு பேருந்துகளில் வரும் மாணவர்கள் கூட்ட நெரிசலால் படிக்கட்டில் பயணம் மேற்கொள்ளவர். இதனை போன்று ஷேர் ஆட்டோக்களில் மாணவர்கள், பெண்கள் கூட்டமாக அமர்ந்து வருகின்றனர். அப்போது மேடான சாலையில் வரும்போது நிலை தடுமாறி விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது.

இதுபோன்று கடந்த 2018ல் நடந்த இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் ஒருவர், 2019ல் நடந்த விபத்தில் முதியவர் ஒருவர், நடப்பாண்டில் கடந்த மாதம் நடந்த விபத்தில் பெண் ஒருவரும் பலியாகினர்.  மேலும் நாள் தோறும் இருசக்கர வாகனத்தில் வருவோர் மேட்டு பகுதி தெரியாமல் விழுந்து காயங்களுடன் செல்வதாக புகார் கூறுகின்றனர். எனவே மேடான பகுதியில் பாலம் அமைத்து சாலையை சீரமைக்க வேண்டும்.

அதுவரை ஒளிரும் அடையாள கோடுகள், ஒளிரும் விளக்குகள், முன்னெச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும். சாலையோரம் செல்லும் காவிரி கூட்டு குடிநீர் குழாயை சரி செய்து, சாலையை சீரமைக்க பொதுமக்களும், வாகன ஓட்டிகளும், குடிநீர் வடிகால் வாரியத்திற்கும், நெடுஞ்சாலைத் துறைக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : death ,road accident ,Kudaudi-Mudukulam , 3 killed, 3 wounded
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...