×

11,12-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்ட அரசாணை ரத்து; மாணவர்கள் நலன்கருதி பழைய பாடத்திட்டமே தொடரும்...தமிழக அரசு அறிவிப்பு..!!

சென்னை: புதிய பாடத்திட்டம் உருவாக்குவதற்கான அரசாணையை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்ட அறிக்கையில், மாநில பொதுப்பள்ளிக் கல்வி வாரிய நிர்வாகக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், மேல்நிலை கல்வி பயிலும் மாணாக்கர்களின் மன அழுத்தம் மற்றும் உயர்கல்வி குறித்த அச்சத்தைப் போக்கும் வகையில் வேலை வாய்ப்பிற்கு ஏற்றதாக பாடத்தொகுப்பு மற்றும் விதிகளை மேம்படுத்தி, நடைமுறையிலுள்ள 4 முதன்மை பாடத்தொகுப்புகளுடன் சேர்த்து புதிய வழிமுறைகளுடன் கூடிய மூன்று முதன்மை பாடத்தொகுப்புகளை அறிமுகப்படுத்தி, மாணவர்கள் மூன்று முதன்மை பாடத்தொகுப்பினையோ அல்லது நான்கு பாடத்தொகுப்பினையோ தெரிவு செய்து கொள்ளும் வகையில் 2020-21-ம் கல்வியாண்டு முதல் மேல்நிலை முதலாமாண்டிற்கு இதனை நடைமுறைப்படுத்த ஆணை வெளியிடப்பட்டது.  

இந்நிலையில், மேல்நிலைக் கல்விப் பாடத்திட்டத்தில் மாணவர்கள் மூன்று முதன்மை பாடங்களை மட்டும் தேர்ந்தெடுக்கும் போது அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள்/ வேலைவாய்ப்புகள் சுருங்க நேரிடும் போன்ற பல்வேறு  காரணங்களுக்காக நான்கு பாடத்தொகுப்பினையே தொடர்ந்து படிக்க அனுமதிக்குமாறு பொதுமக்கள், பொற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோர், பல்வேறு நாளிதழ்கள் மூலமாக அரசுக்கு கோரிக்கைகள் விடுத்துள்ளதாக தெரிவித்து, மேற்காணும்  கோரிக்கைகளை அரசு பரிசீலினை செய்து 2020-21-ம் கல்வி ஆண்டில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள நான்கு முதன்மைப் பாடத்தொகுப்புகளை கொண்ட பாடத்திட்டத்தினை மட்டும் அனைத்துப் பள்ளிகளிலும் தொடர்ந்து  நடைமுறைப்படுத்தவும், புதிய பாடத்திட்ட முறை அறிமுகப்படுத்தப்பட்ட அரசாணையினை இரத்து செய்து ஆணை பிறப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேற்காணும் சூழ்நிலையில் பொதுமக்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துருவினை ஏற்று, மேல்நிலைக் கல்விப் பாடத்திட்டத்தில் மாணவர்கள் மூன்று  முதன்மை பாடங்களை மட்டும் தேர்ந்தெடுக்கும் போது அவர்களின் உயர்கல்விக்கான வாயப்புகள் மற்றும் வேலை வாய்ப்புகள் சுருங்க நேரிடும் என்பதால் மாணாக்கர்களின் நலன்கருதி, மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையினை  இரத்து செய்தும்,2020-21-ம் கல்வியாண்டிலிருந்து ஏற்கனவே நடைமுறையில் உள்ள நான்கு முதன்மைப் பாடத்தொகுப்புகளை கொண்ட பாடத்திட்டத்தினை மட்டும் அனைத்துப் பள்ளிகளிலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தவும் ஆளுநரின்  ஆணைப்படி அரசு ஆணையிடுகிறது.


Tags : Tamilnadu ,Tamilnadu Government , New curriculum void for classes 11-12 Students will continue their old curriculum ... Tamilnadu Government announces .. !!
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...