×

எண்ணெய்க் குழாய்கள் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்த முயற்சிப்பது விவசாயிகளின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் கொடுந்துயரமாகும்: மு.க.ஸ்டாலின் வேதனை!!

சென்னை : கொரோனா ஊரடங்குக் காலத்திலும் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் எண்ணெய்க் குழாய்கள் பதிக்கும் திட்டத்திற்கு விளைநிலங்களைக் கைப்பற்ற சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் கருத்துக் கேட்புக் கூட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், கொரோனா ஊரடங்கு நேரத்தில் ஊழல் செய்வதை’ முன்னுரிமை வேலையாகக் கொண்டு, செயல்படும் முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில், விவசாயிகளின் நிலங்களைப் பறித்திடும் தீர்மானமான எண்ணத்துடன்,  ‘கருத்துக் கேட்புக் கூட்டங்களை’ நடத்துவதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  

கொரோனா நோய்த் தொற்று தமிழக மாவட்டங்களில் தீவிரமாகப் பரவி வருகின்ற காலத்தில்- குறிப்பாக, முதலமைச்சரின் மாவட்டமான சேலத்தில் மட்டும் 1247 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு அவதிப்பட்டு- அங்கு 5 பேர் உயிரிழந்தும் உள்ளார்கள்.கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைப் பணிகளில் தன் சொந்த மாவட்டத்திலேயே முனைப்புக் காட்டாமல், பாரத் பெட்ரோலியத்தின் இருகூர் - தேவனகொந்தி-  ஐ.டி.பி.எல். திட்டங்களுக்கு விளைநிலங்களைக் கைப்பற்ற சேலத்தில் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்துவது, விவசாயிகளின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் கொடுந்துயரமாகும்.எண்ணெய்க் குழாய் பதிக்கும் திட்டத்திற்காக நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும், ‘நிலங்களை எடுக்க’ கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்துவது மனித நேயமற்றது.

அ.தி.மு.க. அரசுக்கு மனித உயிர்களோ, விவசாயிகளின் வாழ்வாதாரமோ முக்கியமல்ல; மத்திய அரசு கை காட்டும் இடத்தில் ‘கைகட்டி’ வாய் பொத்தி நின்று- கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வேளாண் நிலங்களைப் பறித்துக் கொடுப்பது மட்டுமே முக்கியம் என்ற நோக்கில் திரு. பழனிசாமி செயல்படுவது வேதனைக்குரியது. ஆகவே, பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் எண்ணெய்க் குழாய்கள் பதிக்கும் திட்டத்திற்கு விளைநிலங்களைக் கைப்பற்ற சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் கருத்துக் கேட்புக் கூட்டங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன், இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Tags : MK Stalin , Oil Pumps, Project, Farmers, MK Stalin, Pain
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...