கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும்: சுகாதாரத் துறை அமைச்சர் பேட்டி

சென்னை:  திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா தொற்று சிறப்பு மையத்தில் முழு கவச உடை அணிந்து, மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை, சுகாதார துறையினர் குணப்படுத்தி உள்ளனர். இதுவரை திருவள்ளூர் மாவட்டத்தில் 2,895 பேர் பூரண குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும், தொற்று உறுதி செய்யப்பட்ட 30 கர்ப்பிணிகளுக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு பூரண குணமடைந்து மகப்பேறு அடைந்துள்ளனர். இதற்கு திருவள்ளூர் மாவட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

பொது சுகாதார துறை மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரை மருத்துவ முகாம் மூலம் பரிசோதனை செய்து, அதில் தொற்று கண்டறியப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் மாவட்ட கலெக்டருடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பல்வேறு கருத்துகளை தெரிவித்து, அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் 1,375 படுக்கை வசதிகள் தயார் செய்யப்பட்டு உள்ளது. தற்போது 310 படுக்கைகள் மூலம் முழு ஆக்சிஜன் வசதி பெறப்பட்டு வருகிறது. எதிர்கால சூழ்நிலையை கருத்தில் கொண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 3,000 படுக்கைகளில் ஆக்சிஜன் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வளர்ந்த நாடுகளே ஆக்சிஜன் படுக்கை வசதிக்காக தடுமாறக் கூடிய நிலையில், தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு அதிக அளவில் படுக்கை வசதியை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் இதுவரை 60,592 பேர் பூரண குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 13 லட்சத்து 6 ஆயிரத்து  84 மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளது. வீட்டைவிட்டு வெளியே வரும்போது கட்டாயம் முக கவசம் அணிந்து கொண்டும், அடிக்கடி கைகழுவ வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். தமிழகத்தில் இதுவரை 40 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதில் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் 20 பேருக்கு சிகிச்சை அளித்ததில் 18 பேர் குணமாகி உள்ளனர். எனவே, தொற்று பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின், பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும். இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

Related Stories:

>