×

நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளர் மாற்றம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: “எந்த விசாரணைக்கும் தயார்” என்று அடிக்கடி பேட்டியளிக்கும் முதல்வர், நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளர் மாற்றம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா?” என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் ‘ஸ்மார் சிட்டி’ உள்ளிட்ட 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள பணிகளைக்  கவனித்து வரும் தலைமைப் பொறியாளர் நடராஜன் திடீரென்று மாற்றப்பட்டு-சட்ட விதிகளுக்கு மாறாக, சென்னை மாநகராட்சியில் ‘டம்மி’ பதவியில் அமர்த்தப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. அமைச்சர் வேலுமணியின் உள்ளாட்சித் துறையில் அவருக்கு வேண்டாத அதிகாரிகள்-ஊழலுக்கு ஒத்துழைக்காத ஐ.ஏ.எஸ் மற்றும் இதர அதிகாரிகள் பந்தாடப்படுவது புதிதல்ல; வாடிக்கையாக நடைபெற்று வருவது தான் என்றாலும்- இந்த சட்டவிரோதப் ‘பணி மாறுதல்’ நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின்கீழ் 121 நகராட்சிகளிலும், 15 மாநகராட்சிகளிலும் நடைபெறும் ஊழல்களுக்கு எல்லாம் ‘முத்தாய்ப்பாக’ அமைந்திருக்கிறது.

நடராஜனுக்குப் பதில் சென்னை மாநகராட்சியிலிருந்து புகழேந்தி என்ற முதன்மை தலைமைப் பொறியாளரை நகராட்சிகள் ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளராக நியமித்துள்ளார் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி. “நகராட்சி நிர்வாக ஆணையகரத்தில் உள்ள தலைமைப் பொறியாளர் பதவிக்கு சென்னை மாநகராட்சிப் பொறியாளரை நியமிக்கக் கூடாது” என்று தெளிவான சட்ட விதிகள் உள்ளன. இந்த விதியை மீறி புகழேந்தியைக் கொண்டு வந்தது ஏன்? சென்னை மாநகராட்சியில் பணியாற்றிய புகழேந்தி 30.6.2016 அன்றே ஓய்வு பெற்றவர். அவர் ‘தலைமைப் பொறியாளராகப்’ பணியாற்றி, ஓய்வு பெற இருந்த நேரத்தில், ‘பணி நீட்டிப்பு வழங்கிட வேண்டும்’ என்றும், ‘தலைமைப் பொறியாளர் பதவிக்குப் பதில் முதன்மை தலைமைப் பொறியாளராகத் தரம் உயர்த்தி வழங்க வேண்டும்’ என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் 21.6.2016 அன்று ‘அவசரக் கடிதம்’ எழுதினார். அதிலிருந்து 9 நாட்களில் 30.6.2016 அன்று சென்னை மாநகராட்சி ஆணையர் கோரியபடியே புகழேந்திக்குப் பணி நீட்டிப்பும், முதன்மை தலைமைப் பொறியாளர் பதவியும் ‘ஜாக்பாட்’ போல் வழங்கப்படுகிறது.

ஒருவருக்கு அதே பதவியில் பணி நீட்டிப்பு வழங்குவது வழக்கம். ஆனால் பணி நீட்டிப்பும் வழங்கி-அவருக்கு உயர் பதவியும் வழங்கிய ‘அதிசயம்’ புகழேந்திக்காகவே  உள்ளாட்சித்துறை அமைச்சரால் அரங்கேற்றப்பட்டது. இந்தத் தரம் உயர்த்தப்பட்ட பதவியில் ஒரு முறை அல்ல, இருமுறை தலா ‘இரு வருடங்கள்’ அவருக்கு 4 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் தான் சென்னை மாநகராட்சியிலிருந்து ‘நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின்’ தலைமைப் பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் புகழேந்தி. முதலில் புகழேந்திக்குப் பணி நீட்டிப்புக் கோரும் போது ‘5000 கோடி ரூபாய்க்கு’ மேற்பட்ட பணிகளைக் கவனித்து வருகிறார் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கடிதம் எழுதி-அந்த பணி நீட்டிப்பை உள்ளாட்சித் துறை அமைச்சர் வழங்கினார்.

மூன்றரை வருடங்களுக்கு மேல் அப்பணிகளை அமைச்சர் விரும்பியவாறு, அவருக்கு நிறைவளித்திடும் வகையில், ‘நேர்த்தியாகச்’ செய்து விட்டு, இப்போது ‘12 ஆயிரம் கோடி ரூபாய்’ திட்டத்தை கண்காணித்து வரும் நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த 17 ஆயிரம் கோடி ரூபாய்த் திட்டங்களில் நடைபெற்றுள்ள இந்த ‘டிரான்ஸ்பர்’ ஊழல் கொடிகட்டிப் பறக்க,  தனக்குத் தானே ‘பாதுகாப்புக் கவசம்’ அமைத்துக் கொள்ளும் உள்ளாட்சித் துறை அமைச்சரின் உள் நோக்கச் செயல்பாடே காரணம் எனத் தெரிகிறது. அது இன்னும் 11 மாதங்கள்தான் என்பது வேறு விஷயம்; அதன்பிறகு ஒவ்வொரு  உள்ளாட்சித் துறை டெண்டரிலும் நடைபெற்ற ஊழல்களுக்கு வேலுமணி சட்டத்தின் முன் பதில் சொல்லியே தீர வேண்டும்!. இதுவரை சென்னை மாநகராட்சியிலும், தற்போது நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் கீழும் நடைபெறும், நடைபெற்றுள்ள ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட 17000 கோடி ரூபாய்த் திட்டங்களில் பல திட்டங்கள், மத்திய அரசு தரும் நிதியுதவியின் கீழ் நடைபெறும் திட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நடராஜனை சென்னை மாநகராட்சிக்கு மாற்றி-அங்கு ‘தர நிர்ணய தலைமைப் பொறியாளர்’ பதவியில் டம்மியாக அமர்த்தியிருப்பதன் நோக்கம் என்ன?. 17 ஆயிரம் கோடிப் பணிகளும் முறைப்படி நடக்கிறதா-அல்லது முறைகேடுகளின் மொத்த குத்தகைக்கு முழு அடையாளமாக இருக்கிறதா?.அனைத்துமே புலனாய்வு அமைப்பின் மூலம் விசாரிக்க வேண்டியவை! ஒருவேளை முதல்வர் ழனிசாமி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடத்  தயங்கினால்-இத்திட்டங்களில் மத்திய அரசின் நிதியுதவி இருப்பதால்- பணி நீட்டிப்பு பெற்ற அதிகாரியை வைத்து இந்த முக்கியத் திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 121 நகராட்சிகளிலும், 15 மாநகராட்சிகளிலும் நடைபெறும் ஊழல்களுக்கு எல்லாம் ‘முத்தாய்ப்பாக’ அமைந்திருக்கிறது இந்த பணி மாறுதல்

Tags : Chief Engineer ,investigation ,Municipal Administrative Commission Ready ,MK Stalin ,CM ,Municipal Administrative Commission , Municipal Executive Commissioner, Chief Engineer Transition, CBI Inquiry, ready to order? Question of Chief Minister MK Stalin
× RELATED எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு மாற்றம்