×

ஜிஎஸ்டி கணக்குகளை தாக்கல் செய்ய தாமதமானால் 9 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும்

* வணிகவரித்துறை உயர் அதிகாரி தகவல்
* அபராத தொகை மட்டுமே தள்ளுபடி

சென்னை: ஜிஎஸ்டி கணக்குகளை தாக்கல் செய்ய தாமதமானால் 9 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும். அதே நேரத்தில் அபராத தொகை மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று வணிகவரித்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் கடந்த 2017 முதல் ஜிஎஸ்டி வரி வசூலிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இதுவரை தமிழகத்தில் வணிகவரித்துறை சார்பில் சரக்குகளுக்கு மட்டுமே வரி வசூலித்து வந்த நிலையில், தற்போது சேவைகளுக்கு சேர்த்து மாநில அரசு வரி வசூலிக்கிறது. 3 விதமான வரி விகிதம் வசூலிக்கப்பட்டு மத்திய, மாநில அரசுகள் பிரித்து கொள்கிறது.

வணிகர்கள் ஒவ்வொரு மாதமும் 15ம் தேதிக்குள் வரவு, செலவு மற்றும் இருப்பு பொருட்கள் குறித்த கணக்கு விவரங்களை அந்தந்த மண்டல வணிகவரி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அனைத்து தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கடைகள் மூடப்பட்டன. இதனால், கணக்குளை பெரும்பாலான வணிகர்கள் சமர்ப்பிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் கணக்குளை தாக்கல் செய்ய தவறும்பட்சத்தில் அபராதம் வசூலிக்கப்படுவதும், 2 மாதங்களில் தாக்கல் செய்யாவிட்டால் பதிவு ரத்து செய்யப்படும் என்ற நிலையில் கால அவகாசம் வழங்க வணிகர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதை தொடர்ந்து, தமிழக வணிகவரித்துறை சார்பில் கணக்குகளை தாக்கல் செய்ய தாமதம் ஆகும் பட்சத்தில், அதற்காக விதிக்கப்படும் அபராதத்தை தள்ளுபடி செய்துள்ளது. குறிப்பாக, மார்ச் மாத கணக்கை ஏப்ரல் 15ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், அவ்வாறு தாக்கல் செய்யாமல் இருந்தால், அடுத்து வரும் 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது. அதன்பிறகும், கணக்குகளை தாக்கல் செய்யாமல் இருந்தால் அபராதம் மற்றும் 18 சதவீதம் வட்டி செலுத்தப்பட வேண்டும். ஆனால், தற்போது, அந்த அபராத தொகை செலுத்துவது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கணக்கு தாக்கல் செய்ய தாமதத்துக்கான வட்டி 18 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி குறைப்பு மற்றும் அபராத தள்ளுபடி நடைமுறை செப்டம்பர் 30ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று வணிகவரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : GST , GST account, if filed, delayed, 9% interest will be charged
× RELATED ஜிஎஸ்டி குறித்து கேள்வி கேட்ட பெண்ணை...