×

மின் கட்டணத்தில் மானியம் தர வேண்டும்: கே.சசிகுமார், தமிழ்நாடு மின்கழக தொமுச மாநில தலைவர்

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு அமலில் உள்ளதால், பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இதனால் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கொரோனா தொற்று காரணமாக தமிழக மின் வாரியத்தின் மூலம் வீடுகளில் மின் கணக்கீடு செய்யமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதனால் மின் நுகர்வோர் கடந்த ஜனவரி மாதம் எவ்வளவு மின் கட்டணம் செலுத்தினார்களோ, அதே தொகையை மார்ச் மாதம் மின்கட்டணமாக செலுத்தினால் போதுமானது என மின் வாரியம் அறிவிப்பு செய்தது. பொதுமக்களும் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் மின் கட்டணம் செலுத்தினார்கள். இந்தநிலையில், தமிழக மின்வாரியம் வீடு வீடாக சென்று மின்அளவீடு செய்ய பணியாளர்களுக்கு உத்தரவிட்டது. அதன்படி மார்ச் - மே இடையே  4 மாதங்களுக்கு மொத்தமாக கணக்கீடு செய்தது சரியல்ல; கணக்கீடு செய்யப்பட்ட நான்கு மாத யூனிட்டை இரண்டாக வகுத்து மார்ச் மாதத்திற்கு பாதி யூனிட் மே மாதத்துக்கு பாதி யூனிட் என பிரித்து கணக்கீடு செய்து, கட்டணம் செலுத்த உத்தரவிட்டிருந்தால் குழப்பம் வராது.

தமிழகத்தில் கட்டணம் 3 முறையில் வசூல் செய்யப்படுகிறது. 100-200 யூனிட் என்றால் முதல் 100 இலவசம், 101-200க்கு ரூ.1.50, 200- 500 யூனிட் என்றால், முதல் 0-100 இலவசம், 101-200 ரூ.2, 201-500 யூனிட் வரை ரூ. 3 எனவும். இதுவே 500 என்றால் முதல் 0-100 இலவசம் 101-200 ரூ.3.50, 201-500 ரூ.4.60, 501 யூனிட்டுக்கு மேல் ரூ. 6.60 என்ற ஸ்லாப் விகிதத்தில் கணக்கிடப்பட்டு வசூல் செய்யப்படுகிறது. அதன்படி தான் 2கோடியே 14 லட்சம் மின் நுகர்வோர்கள் கட்டணம் செலுத்தி வந்தனர்.
தற்போது 4 மாத மின் கணக்கை ஒன்றாக சேர்த்து போட்டதால் 500 யூனிட்டுக்கு மேலான ஸ்லாப் விகிதத்தில், 200 யூனிட் முதல் 500 யூனிட் வரை உபயோக படுத்தி வரும் சுமார் 70 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் வைத்திருப்பவர்கள், அவர்கள் வழக்கமாக செலுத்தி வந்த மின்கட்டணத்தை விட இரண்டு மடங்கு மின்கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயதிற்கு தள்ளபட்டுள்ளனர்.

உதாரணமாக ஒருவரின் 4 மாத மின் செலவு 1050 எனில் அதில் கோடை காலத்தில் அதிகமாக செலவு செய்திருப்பார். ஊரடங்குக்கு முந்தய மாதத்தில் குறைவாக செலவு செய்திருப்பார், அது குறைந்த யூனிட்டாக இருக்கும். தற்போது 4 மாதத்தையும் சேர்க்கையில் 1050 என்றால் அதனை இரண்டாக பிரித்தால் 525-525 ஆகும்; ஸ்லாப் முறையில் இதன் கட்டணம் அதிகமாகும். இதனால் தான் தற்போது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மின் கட்டணம் உயர்ந்துள்ளது. பொதுமக்கள் மிகுந்த மனவேதனையுடன்உள்ளனர். ஏற்கனவே கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் சூழ்நிலையில் மேலும் பாதிக்கப்பட்டு உள்ளனர். 4 மாதத்துக்கு சேர்ந்து கணக்கீடு செய்யும் முறையில் சில மாறுதல்கள் தமிழக அரசும், மின் வாரியம் செய்தால் கடுமையான மின் கட்டணம் உயர்வை குறைக்க முடியும். மார்ச் மாதம் கொரானாவால் மின் கணக்கீடு செய்யமுடியாத சூழ்நிலை என மின்வாரியம் தான் அறிவித்து. ஜனவரி  மாத மின் கட்டணம் செலுத்த சொன்னது. அதன்படி தான் பொதுமக்கள் செலுத்தினார்கள்.

தற்போது மே மாதம் மின்கட்டணம் கணக்கீடு செய்து எவ்வளவு யூனிட் வருகிறதோ மின்வாரியம் கூறியபடி பொதுமக்கள் மார்ச்  மாதம் எவ்வளவு யூனிட் க்கு பணம் செலுத்தினார்களோ. இந்த யூனிட்டை 4 மாத யூனிட்டில் நேரடியாக கழித்து விட்டு மீதம் உள்ள யூனிட்டை பாதி பாதியாக மே மாதம் கணக்கீடு செய்தால் மின் கட்டணம் குறைவாக வரும். பொதுமக்கள் ஸ்லாப் சிஸ்டத்தினால் பாதிக்கபடமாட்டார்கள். தற்போது மின் வாரியம் எடுத்துள்ள கணக்கீடு முறையால் 4 மாதத்துக்கு அதிகபட்ச ஸ்லாப் சிஸ்டம் படி பல மடங்கு மின்கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பொதுமக்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் உண்மையில் அவர்களுக்கு உதவிட தமிழக அரசு இந்த 4 மாத கணக்கீடு தொகையில் 25 சதவீதம் மானியமாக மின் வாரியதிற்கு வழங்கி பொதுமக்கள் 75 சதவீதமாக மின்கட்டணம் மட்டுமே செலுத்திட வழிவகை செய்திட வேண்டும். மார்ச் - ஏப்ரல் மாதத்திற்கு பாதி யூனிட் ஏப்ரல் - மே மாதத்துக்கு பாதி யூனிட் என பிரித்து கணக்கீடு செய்து, கட்டணம் செலுத்த உத்தரவிட்டிருந்தால் குழப்பம் வராது.

* ரூ.1000 கொடுத்து விட்டு 4000 வசூல் செய்கின்றனர்: விஜயேந்திரன், வக்கீல்

ஊரடங்கு காரணமாக தொலைக்காட்சி, ஏசி, பிரிட்ஜ் போன்ற மின்சாரம் தேவைப்படும் பொருட்கள் அதிக அளவில் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து மின்சார வாரிய அலுவலகம் விடுமுறை அளிக்கப்பட்டதால் தமிழ்நாடு மின் வாரியத்தின் மூலம் வீடுகளில் மின் கணக்கீடு செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதனால் மின் நுகர்வோர் கடந்த பிப்ரவரி மாதம் எவ்வளவு மின்கட்டணம் செலுத்தினார்களோ, அதே தொகையை ஏப்ரல் மாதம் மின்கட்டணமாக செலுத்தினால் போதுமானது என மின் வாரியம் அறிவிப்பு செய்தது. அதன்படி பொதுமக்களும் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் மின் கட்டணம் செலுத்தினார்கள்.

அதன்பிறகு ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்ட நிலையில் மின்வாரியம் ஊழியர்களை வீடு வீடாக சென்று மின்அளவீடு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி மின்வாரிய ஊழியர்களும் மே மாதம் தாங்கள் வேலை செய்யும் பகுதிகளில் உள்ள வீட்டிற்கு சென்றார்கள். சிலர் மின்கணக்கீடு செய்ய வரவே இல்லை. அவ்வாறு வந்தாலும் அவர்கள் ஏற்கனவே பணம் கட்டிய மாதத்தையும் சேர்த்து 4 மாதத்திற்கான மின் கணக்கீடுளை கணக்குப் பண்ணி அதையே அங்குள்ள அட்டையில் குறித்து வைத்துவிட்டு செல்கின்றனர். இதனால் ஏற்கனவே பணம் செலுத்திய மாதத்திற்கும் சேர்த்து பணம் கட்டும் போது மின்கட்டணம் அதிகரிக்கிறது. தமிழ்நாடு மின்சார வாரியம் ரெகுலேசன் விதி 11(2)ன்படி கடைசியாக 4 மாதங்களுக்கு கணக்கு எடுத்து அதனுடைய சாரசரி கட்டணத்தை செலுத்த அனுமதிக்க வேண்டும்.

ஏற்கனவே ரூ.500 வந்தது என்றால் தற்போது ரூ.3000 பணம் கட்டுங்கள் என்று சொல்கிறார்கள். அதாவது ஏழு மடங்கு முதல் 10 மடங்கு வரை அதிகமாக வசூல் பண்ணுகிறார்கள். மக்களுக்கு ரூ.1000 கொடுப்பது போல் கொடுத்து இப்போது வட்டி போட்டு ரூ.4000 மாக வசூல் பண்ணுகிறார்கள். இதற்கிடையில் மின்கட்டணம் அதிகமாக வசூல் செய்வதாலும், சரியாக மீட்டர் கணக்கீடு செய்யவில்லை என்ற காரணத்திற்காக தமிழ்நாடு மின்வாரிய செயலாளருக்கு கடந்த 3ம் தேதி வக்கீல் நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. அதற்கு முறையான பதில்கள் இதுவரை வரவில்லை. அதைவிடுத்து 2 முதல் 4 மடங்கு அதிகரித்து பணம் வசூல் செய்வது எந்த விதத்தில் நியாயம் இல்லை. மேலும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்  நீதிமன்றத்தில் வழக்கு போடும் போது மீட்டரில் ரீடிங் எடுத்து அதற்குரிய கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று கூற வாய்ப்புள்ளது.

எனவே எவ்வளவு மின்சாரம் பயன் படுத்தியிருக்கிறீர்களோ? அதற்கான பணத்தை கட்ட சொல்ல வேண்டும். இது போன்று சென்னையில் மட்டும் இல்லை தமிழகம் முழுவதும் இதேபோல் தான் கணக்கெடுக்கப் பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் 4 மாதத்தை விட அதிகமாகவே பணம் செலுத்த சொல்கின்றனர். இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்தில் கேட்டால் மீட்டரில் பிரச்னை உள்ளது. எனவே மீட்டரை மாற்ற வேண்டும் என்று கூறுகின்றனர். பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சராசரி அல்லது இந்த மாதத்தில் என்ன கணக்கீடு செய்யப்பட்டுள்ளதோ? அதற்குறிய பணத்தை செலுத்த அனுமதிக்கலாம். எனவே உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கண்டிப்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது உறுதி. சிலர் மின்கணக்கீடு செய்ய வரவே இல்லை. 4 மாதத்திற்கான மின் கணக்கீடுளை கணக்குப் பண்ணி அதையே அங்குள்ள அட்டையில் குறித்து வைத்துவிட்டு செல்கின்றனர்.


Tags : K. Sasikumar ,Tamil Nadu , Electricity Tariff Subsidy, K. Sasikumar, Head of State of Tamil Nadu Power Plant
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...