×

வீட்டில் இருந்தே சுவாமி தரிசனத்தை கண்டுகளிக்கும் வகையில் திருக்கோயில் தொலைக்காட்சி தொடக்கம்: அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை

சென்னை: வீட்டில் இருந்தே சுவாமி தரிசனத்தை கண்டுகளிக்கும் வகையில் திருக்கோயில் தொலைக்காட்சி தொடங்க அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. தற்போது இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகின்றன என்று அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி கோயில் அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.8.75 கோடி செலவில் திருக்கோயில் தொலைக்காட்சி ஒளிப்பரப்புக்கான முன்னேற்பாடுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. திருக்கோயில் தொலைக்காட்சியில் நாள் முழுவதும் ஒளிபரப்பு செய்ய அதிகளவு படக்காட்சிகள் தேவைப்படுவதால் ஒவ்வொரு திருக்கோயில்களிலும் நடைபெறும் பிரசித்தி பெற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் வீடியோகிராபர்கள் மூலம் ஒளிப்பதிவு செய்து அதற்கான குறிப்புகளுடன் ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

வீடியோ ஆவணப் படங்கள் மற்றும் கோயில் நிகழ்வுகளை ஒளிப்பதிவு செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் :
* கோயில் வளாகம், முகப்பு, விமானங்கள், கோபுரங்கள், கோயிலுக்கான பெயர் தெரியும் வகையில் தொடக்கம் பதிவுகள் இடம்பெற வேண்டும்.
* கோயில் அமைவிட விவரங்கள் தெளிவாக இடம்பெற வேண்டும்.
* கோயில் தல வரலாறு (பின்னணி வர்ணனை, தேவையான காட்சிகளுடன்)
* கோயிலில் நடைபெறும் திருவிழாக்கள் (பின்னணியில் சம்பந்தப்பட்ட கோயில் தொடர்பான பாடல்கள் இசையுடன்)
* கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் நெகிழ்ச்சியான அனுபவங்கள் மிகவும் சுருக்கமாக பதிவு செய்ய வேண்டும். (30 வினாடிகள்)
* கோயிலில் பக்தர்களுக்கான வசதிகள் குறித்த விபரங்கள் இடம்பெற வேண்டும். ஸ்ரீ கோயிலில் நடைபெறும் சிறப்பு பூஜைகள், நடைபெறும் நேரம் தங்க ரதம் போன்றவற்றிற்கான கட்டண விபரங்கள், நடைபெறும் நேரங்கள் குறிப்பிட வேண்டும்.
* ஒளிப்பதிவுக் காட்சிகளில் கோயில் பணியாளர்கள் இடம்பெறுவது முற்றிலும் தவிர்த்தல் நலம்.
* ஒளிப்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்ட சுவாமி உருவங்களை காண்பிக்கும் பொழுது அவற்றின் முழுமையான உருவங்களை ஒளிப்பதிவு செய்ய வேண்டும். சுவாமி உருவங்களை தூரத்தில் இருந்து நெருக்கமான காட்சிகளாக மிகவும் அழகாக காண்பிக்க வேண்டும்.
* தலச்சிறப்பைச் சொல்லும்போதும் ஓதுவார்கள் பாடும் போதும் அவர்களது உருவத்தை கீழ் ஓரத்தில் அஞ்சல்வில்லை அளவில் காண்பித்தால் போதும். அந்த நேரத்தில் சிற்பங்கள் அல்லது கோயிலின் சிறப்பான பகுதிகளைக் காட்சிப்படுத்த ஆயத்தமாக இருக்க வேண்டும்.
* ஒரு கோயிலின் வீடியோ ஆவணப்படம் தயார் செய்யும் பொழுது அந்த கோயிலின் அனைத்து நிகழ்வுகளும் தொடர் நிகழ்ச்சிகளாக ஒரே சிடியில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
* முதுநிலை கோயில்களின் வீடியோ ஆவணப்படங்கள் தயார் செய்யும் பொழுது அவற்றின் உபதிருக்கோயில்கள் குறித்த நிகழ்வுகளையும், சிறப்புகளையும் இடம்பெற செய்திடலாம்.
* மூலிகை ஓவியங்கள், புரதான கல்வெட்டுகள் இருந்தால் அதற்கான படங்களும் செய்திகளும் ஒளிப்பதிவு செய்யப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Swami ,home ,Action Department ,Tirukoil , Home, Swami Darshan, Temple, Television, Charity Department
× RELATED சரணம்… சரணம்… சரணம் காணும் சரணாலய புகலூர்