தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்காக மாவட்டத்தில் 1400 மையங்கள் தயார்: அமைச்சர் பென்ஜமின் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூரில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு அமைச்சர்கள் பா.பென்ஜமின், க.பாண்டியராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் முன்னிலை வகித்தார். பின்னர் அமைச்சர் பென்ஜமின் கூறுகையில், மாவட்டத்தில் 13 மாநில எல்லைகள் மற்றும் 20 மாவட்ட எல்லைகள் மூடிவைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. வெளி மாநில மக்கள் உள்நுழையாமலும், மாவட்டத்தில் உள்ள மக்கள் வெளியில் செல்லாமலும் கண்காணிப்படுகின்றனர். மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக போதிய கிருமிநாசினிகளும், தடுப்பு உபகரணங்களும் போதுமான அளவு இருப்பில் உள்ளது. மாவட்டத்தில், தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்காக 1400 மையங்களும், 1250 படுக்கை வசதிகளும், 46 வெண்டிலேட்டர்களும் தயார் நிலையில் உள்ளது.

144 தடை உத்தரவை மீறியதாக 86,960 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள், விதிகளை மீறி கடைகளை திறந்வர்கள் என ரூ.14.55 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இரு நபர்கள் மீது சமூகவளைதளத்தில் வதந்தி பரப்பியதால் கைது செய்யப்பட்டுள்ளனர். கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாடு அறை 044 27664177, 044 27666746 ஆகிய எண்களையும் 9444317862 என்ற வாட்ஸ்ஆப் எண்ணையும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். இதனால் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினரும் நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றார். இதில், எம்எல்ஏக்கள் பி.எம்.நரசிம்மன், கே.எஸ்.விஜயகுமார், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, மாவட்ட எஸ்பி அரவிந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் வெ.முத்துசாமி, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அரசி ஸ்ரீவத்சவ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

More
>