×

பறிமுதல் செய்த வாகனத்தை திருப்பி தரக்கோரி செல்போன் டவரில் ஏறி வெல்டர் ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (40). வெல்டிங் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று கும்மிடிப்பூண்டி பகுதிகளில் முழு ஊரடங்கு காரணமாக எளாவூர், சுண்ணாம்புகுளம் ஆகிய பகுதிகளில் ஆரம்பாக்கம் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நரசிங்புரத்திலிருந்து - சுண்ணாம்புகுளம் பகுதிக்கு ராஜா, இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது ஆரம்பாக்கம் போலீசார் ‘‘முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் யாரும் வெளியில் செல்லக்கூடாது’’ என்று கூறி ராஜாவின்  இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனால் மனமுடைந்த ராஜா, எளாவூர் பஜார் பகுதியில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி போலீசார் தனது வாகனத்தை திருப்பித்தரவேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

தகவலறிந்த ஆரம்பாக்கம் போலீசார் அவரை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் ராஜா, “என்னுடைய இரு சக்கர வாகனம் திருப்பிக் கொடுத்தால் மட்டுமே கீழே இறங்குவேன். இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன்” என்று கூறி மிரட்டினார். ஆரம்பாக்கம் போலீசார் விரைந்து சென்று ராஜாவின் இருசக்கர வாகனத்தை கொண்டு வந்தனர். அதற்குப் பின்பு தான் ராஜா செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கினார். இதனால் அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : Welder ,vehicle Welder , Confiscation, vehicle, refund, cell phone tower, welder demonstration
× RELATED பகலில் வெல்டர் இரவில் கொள்ளை: பிரபல கொள்ளையன் ைகது