×

2021ம் ஆண்டுக்கு முன் தடுப்பூசி சாத்தியமில்லை: அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: பொதுமக்கள் பயன்பாட்டிற்கான கொரோனா தடுப்பூசி 2021ம் ஆண்டுக்கு முன் கண்டுபிடிப்பது சாத்தியமில்லை என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி உலகம் முழுவதும் தீவிரமாக நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் 6 இந்திய நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதில், ஐசிஎம்ஆர், பாரத் பயோடெக் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கோவாக்சின் மனிதர்கள் மீதான பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளது. இந்த ஆய்வுகளை ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் முடிக்க வேண்டுமென்று சோதனை மையங்களுக்கு ஐசிஎம்ஆர் உத்தரவிட்டுள்ளது உள்ளது. பீகாரில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதால், வாக்கு வங்கியை குறி வைத்து மத்திய அரசு, அழுத்தம் கொடுக்கிறது. இதனால் மனித உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்று அரசியல், மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், புதிய தடுப்பு மருந்தானது சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்ட அனைத்து பரிசோதனையும் செய்யப்படும், தேவையற்ற சில பரிசோதனைகள் மட்டும் தவிர்க்கப்படும் என ஐசிஎம்ஆர் விளக்கம் அளித்தது. இந்நிலையில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் கோவாக்சின், சைகோவ்-டி உள்பட, 11 மருந்துகள் மட்டுமே மனிதனுக்கு அளிக்கப்பட்டு பரிசோதனை நடந்து வருகிறது. ஆனால், இவற்றில் எதுவும் 2021ம் ஆண்டுக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட சாத்தியமில்லை.

இங்கிலாந்தின் அஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் ஏஇசட்டி122, அமெரிக்க நிறுவனமான மாடெர்னாவின் எம்ஆர்என்ஏ-1273 ஆகியவை இந்திய நிறுவனங்களுக்கு தடுப்பூசி வினியோகிக்க ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இவற்றின் 2வது மற்றும் 3வது் கட்ட ஆய்வுகளுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. முதல், இரண்டு கட்ட ஆய்வுகள் பாதுகாப்பானதா எனவும் மூன்றாவது கட்ட ஆய்வு எதிர்வினை உண்டாக்கும் செயல்திறன் கொண்டதா என்று பரிசோதிக்கப்படும். ஒவ்வொரு கட்ட ஆய்வுக்கும் பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் கூட எடுத்து கொள்ளப்படும். எனவே, கொரோனாவுக்கான தடுப்பு மருந்து 2021க்கு முன் பயன்பாட்டிற்கு வருவது சாத்தியமில்லை.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Ministry of Science and Technology , Pre-Vaccine, Ministry of Science and Technology, Information, 2021
× RELATED நாளை நமதே; 2021-ம் நமதே!: எடப்பாடியார்...