×

கப்பல் கேப்டன் எனக்கூறி அறிமுகம் திருநங்கையை காதலித்து ரூ.2.5 லட்சம் மோசடி: வாலிபர் கைது

அண்ணாநகர்: சென்னை அமைந்தகரை பி.பி.தோட்டம் பகுதியை சேர்ந்த திருநங்கை பிரியங்கா (35). இவரிடம், புழல் பகுதியை சேர்ந்த முகமது உசேன் (25) என்பவர், தன்னை கப்பல் கேப்டன் என்றுகூறி அறிமுகமாகி உள்ளார். இருவரும் 6 மாதமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பிரியங்காவிடம் இருந்து ரூ.2.5 லட்சத்தை வாங்கிய முகமது உசேன் அதன்பிறகு தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து பிரியங்கா, கடந்த மார்ச் மாதம் அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதை தொடர்ந்து முகமதுஉசேன், தூத்துக்குடி சென்று அங்கு மற்றொரு திருநங்கையான தமிழ்செல்வி (எ) பாத்திமா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் வாழ்ந்து வந்தார்.

கடந்த 6 நாட்களுக்கு முன்பு தமிழ்செல்வி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தியை கேள்விப்பட்ட பிரியங்கா, அவருடைய தோழிகள் ஆகியோர் கடந்த 3ம் தேதி, அமைந்தகரை காவல் நிலையம் வந்தனர். கடந்த மார்ச் மாதம் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து  முற்றுகையிட்டனர். தகவலறிந்து அண்ணாநகர் துணை ஆணையர் சாமிநாதன் மற்றும் உதவி கமிஷனர் பாலமுருகன் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். துணை ஆணையர், சாமிநாதன், உதவி கமிஷனர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் விசாரணை செய்தனர். இதையடுத்து தனிப்படை போலீசார் தூத்துக்குடி சென்று தலைமறைவாக இருந்த முகமது உசேனை நேற்றுமுன்தினம் இரவு, கைது செய்தனர். அவரை அரும்பாக்கம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரிக்கின்றனர்.

* அலட்சியத்தால் உயிரிழப்பு
திருநங்கை பிரியங்கா கூறுகையில், ‘கடந்த 3.3.20ம் தேதி அன்று அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். புகாரை வாங்கிய பெண் ஆய்வாளர் நசிமா நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். முகமது உசேன், ஒரு மோசடி பேர்வழி. நான் புகார் கொடுத்தபோதே நடவடிக்கை எடுத்திருந்தால் தமிழ்செல்வியின் இறப்பை தவிர்த்திருக்கலாம். நாங்கள் திருநங்கை என்பதால் போலீசார் அலட்சியம் காட்டுகின்றனர்’’ என்றார்.

Tags : Ship Captain , Ship Captain, Intro, Transgender, Love and Arrested
× RELATED போலி சான்றிதழ் வழங்கிய வழக்கில்...