×

முழு ஊரடங்கு உத்தரவுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு: போலீஸ் கமிஷனர் பேட்டி

சென்னை: சென்னையில் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, நேற்று அதிகாலை முதல் போலீசார் ரோந்து மற்றும் பாதுகாப்பு, வாகன சோதனைகளில் ஈடுபட்டனர். அந்த வகையில் சென்னை அமைந்தகரை மற்றும் அண்ணா ஆர்ச் பகுதியில் நடந்த வாகன தணிக்கையை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: முழு ஊரடங்கிற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. மக்களிடையே நல்ல விழிப்புணர்வு இருக்கிறது. வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம். மக்களும் காவல்துறைக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள்.

நாளை (இன்று) முதல் முழு ஊரடங்கு தளர்த்தப்பட இருப்பதால், சென்னையில் மக்கள் அதிகமாக கூடும் மார்க்கெட் பகுதிகளில் கூடுதல் காவலர்களை கண்காணிக்க நியமித்துள்ளோம். பொதுமக்கள் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவதை பின்பற்ற விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். வணிக நிறுவன உரிமையாளருடன் அந்தந்த காவல் மாவட்ட துணை கமிஷனர்கள் ஆலோசனை கூட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளேன். மாதவரம், காசிமேடு உள்ளிட்ட மார்க்கெட்டுகளில் மக்கள் கூடும் இடங்களில் பொதுமக்களுக்கு காவல்துறையினர் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவுரைகளை வழங்குவார்கள். விதிகளை மீறும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்தை மீறி பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினர் காவலர்கள் போன்று செயல்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். முழு ஊரடங்கை மீறியதாக இதுவரை ஒரு லட்சத்து 10 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்து, 87 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Commissioner of Police , Full curfew, orders, people, reception, police commissioner, interview
× RELATED மதுரை மாநகர காவல் துணை ஆணையருக்கு கொரோனா இருப்பது உறுதி