×

மாவட்டங்களில் 2,437 பேர் என தொடர்ந்து அதிகரிப்பு தமிழகத்தில் ஒரேநாளில் 4,150 பேருக்கு கொரோனா: சென்னையில் 1,713 பேருக்கு தொற்று

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னையில் 1,713  பேருக்கும், மற்ற மாவட்டங்களில் 2,437 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கையை மீறி பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருந்தது. எனவே, கடந்த 19ம் தேதி முதல் நேற்று வரை இந்த மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் மற்ற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக மதுரை, வேலூர், தேனி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தது. இதை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. மதுரையில் மட்டும் வரும் 12ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் 4,150 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, நேற்றும் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் நேற்று மட்டும் 34,102 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 4150 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வசித்தவர்கள் 4077 பேர். வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 73 பேர். அதிகபட்சமாக சென்னையில் 1713 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 2437 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மதுரையில் 308 பேரும், செங்கல்பட்டில் 274 பேரும், திருவள்ளூரில் 209 பேரும், விழுப்புரத்தில் 179 பேரும், காஞ்சிபுரத்தில் 152 பேரும், திருவண்ணாமலையில் 141 பேரும், விருதுநகரில் 113 பேரும், விழுப்புரத்தில் 109 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 151 ஆக உயர்ந்துள்ளது. நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 2481 பேர் ஆண்கள். 1669 பேர் பெண்கள். தற்போது வரை 68,085 ஆண்கள். 43,044 பேர் பெண்கள், 22 திருநங்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 2186 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 62,778 பேர் குணமாகியுள்ளனர். மேலும், 46,860 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் தனியார் மருத்துவமனையில் 17 பேரும், அரசு மருத்துவமனையில் 43 பேர் என மொத்தம் 60 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் மட்டும் 21 பேர் மரணம் அடைந்துள்ளனர். திருவள்ளூரில் 10, செங்கல்பட்டில் 8, மதுரையில் 5, சிவகங்கையில் 3, காஞ்சிபுரத்தில் 3, தேனியில் 2, விருதுநகர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, கரூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் மரணம் அடைந்துள்ளனர்.  இவர்களில் 3 பேர் எந்தவித இணை நோய்களும் இல்லாமல் கொரோனாவால் இறந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1510 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 1510ஆக அதிகரித்துள்ளது.
* இதுவரை 62,778 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.

Tags : Tamil Nadu , District, 2,437 people, increase, Tamil Nadu, 4,150 people
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...