×

ஊரடங்கு தளர்வு...எல்லாரும் வேலைக்கு வாங்க...! நாளை முதல் அண்ணா பல்கலைக்கழகம் வழக்கம் போல் செயல்படும் என அறிவிப்பு

சென்னை: ஊரடங்கு தளர்வால் நாளை முதல் அண்ணா பல்கலைக்கழகம் வழக்கம் போல் செயல்படும் என பதிவாளர் அறிவித்துள்ளார். பேராசிரியர்கள், ஊழியர்கள் கட்டாயம் பணிக்கு வருகை தர வேண்டும் எனவும் வெளியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. தமிழகத்தில் தலைநகர் சென்னைதான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் முதலிடம் வகிக்கிறது. சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் கொரோனா பரவல் வேகம் கட்டுக்குள் வந்தபாடில்லை.

இதனால் தமிழகத்தில் ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மற்றும் மதுரை மாவட்டங்களில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகங்களும் ஜூலை 5ம் தேதி வரை மீண்டும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும், ஊரடங்கு நீடித்தாலும், நாளை முதல் அதிக தளர்வுகள் அமலுக்கு வருகின்றன. அதே நேரத்தில், இன்று எவ்வித தளர்வுகளுமின்றி, முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. மதுரையில் மட்டும், கொரோனா பரவலை தடுக்க, முழு ஊரடங்கு, மேலும் ஏழு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களிலும், தளர்வுகள் அமலுக்கு வருகின்றன. மேலும், இம்மாவட்டங்களில் நாளை முதல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதை சார்ந்த நிறுவனங்கள், அனைத்து தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் போன்றவற்றில், 50 சதவீத பணியாளர்கள் பணியாற்ற, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வால் நாளை முதல் அண்ணா பல்கலைக்கழகம் வழக்கம் போல் செயல்படும் என பதிவாளர் அறிவித்துள்ளார். பேராசிரியர்கள், ஊழியர்கள் கட்டாயம் பணிக்கு வருகை தர வேண்டும் எனவும் வெளியுறுத்தியுள்ளார். பணிக்கு வருவோர்களுக்கான பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கீழ் இயங்கும் 4 வளாக கல்லூரிகளும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Anna University , Curfew relaxation, Anna University, notification
× RELATED எப்போ கேட்கும் மைக்செட் சத்தம்...?...