×

நெல்லை கால்வாய் கடைமடை பகுதிகளில் கருகும் பயிர்களை காப்பாற்ற போராடும் விவசாயிகள்: தண்ணீரின்றி பாழாகும் விவசாயம்

நெல்லை: நெல்லை சுற்றுவட்டாரங்களில் கடைமடை பகுதிகளில் போதிய தண்ணீரின்றி சுமார் 400 ஏக்கரில் நெற்பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நெல்லை கால்வாயை சீரமைத்து கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வழங்க உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். நெல்லை தாமிரபரணி ஆற்று கால்வாய்களின் பிரதான கால்வாய்களில் ஒன்றாக நெல்லை கால்வாய் உள்ளது. இக்கால்வாயின் கடைமடை பகுதி விவசாயிகள் ஆண்டுதோறும் கோடை காலங்களில் தண்ணீரின்றி சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அருகன்குளம் தொடங்கி பாலாமடை, கல்குறிச்சி, ராஜவல்லிபுரம், குப்பக்குறிச்சி குளம் வரை விவசாயிகள் ஆண்டுதோறும் மே, ஜூன் மாதங்களில் தண்ணீரின்றி தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இவ்வாண்டு குளங்களில் ஓரளவுக்கு இருந்த தண்ணீரை பயன்படுத்தி பாலாமடை, கல்குறிச்சி உள்ளிட்ட பகுதி களில் ஓரளவுக்கு முன்கார் சாகுபடியும் நடந்தேறியது.

குப்பக்குறிச்சி பகுதியில் விவசாயிகள் குளத்தில் இருந்த தண்ணீரை நம்பி சுமார் 400 ஏக்கரில் நெல் பயிரிட்டனர். காற்றும், வெயிலும் ஒருசேர இவ்வாண்டு அடித்ததால், குளத்தில் சீக்கிரமே தண்ணீர் வற்றிவிட்டது. இதன் காரணமாக நெற்பயிர்கள் அறுவடையை நெருங்கும் வேளையில், பயிர்கள் தண்ணீரின்றி தவிக்கின்றன. கருகும் பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் குளத்தில் டிராக்டர் மற்றும் உழவு இயந்திரங்களை பயன்படுத்தி ரப்பர் குழாய்கள் மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுத்து வயல்களுக்கு கொண்டு செல்கின்றனர். வயல்கள், வரப்புகளை தாண்டி செல்ல வேண்டியுள்ளதால் போதிய அளவு பயிர்களுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் அறுவடை முடியும் வரை பயிர்களை காப்பாற்ற முடியுமா என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர்.

இதுகுறித்து குப்பக்குறிச்சி விவசாயிகள் கூறுகையில், ‘‘நெல்லை கால்வாய் பாசன குளங்களில் இரண்டாம் பூவாக பல விவசாயிகள் உளுந்து பயிரை சாகுபடி செய்கின்றனர்.  நெல்லை கால்வாயின் கடைசி குளமாக எங்கள் குளம் இருப்பதாலும், தண்ணீர் அதிகம் காணப்பட்டதாலும் நாங்கள் நெல் சாகுபடி செய்தோம். இப்போது குளத்தில் தண்ணீர் குறைந்துவிட்டது. பைப்புகள் மூலமே வயல்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. ராஜவல்லிபுரம், பாலாமடை குளங்களில் மீன்பிடி குத்தகை முடிந்தவுடன் தண்ணீரை வீணாக ஆற்றில் திறந்து விடுகின்றனர். கடைமடை குளமான எங்களுக்கு அந்த தண்ணீர் கிடைத்தால் கூட பயனுள்ளதாக இருக்கும். நெல்லை கால்வாயில் இருந்து கடைமடை குளமான எங்களுக்கு நேரடியாக தண்ணீர் தர வசதிகளும் உள்ளன. கால்வாயை சீரமைத்து அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்’’ என்றனர்.

கூடுதல் செலவுகள்
குப்பக்குறிச்சி குளத்தில் கிடக்கும் தண்ணீரை வயல்களுக்கு கொண்டு செல்ல விவசாயிகள் முன்பு ஆயில் மோட்டார்களை பயன்படுத்துவர். தற்போது அவை வாடகைக்கு கிடைப்பதில்லை. ஆயில் மோட்டார்களை பணம் கொடுத்து வாங்கினால் ரூ.7 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை செலவிட வேண்டியுள்ளது. இதற்காக விவசாயிகள் சிறிய டிராக்டர்கள் மற்றும் பவர் டில்லர் கருவிகளை பயன்படுத்தி அதன் மூலம் குழாய்களில் குளத்து நீரை உறிஞ்சி எடுத்துச் செல்கின்றனர். இதற்காக டீசல் செலவுகளும் அதிகமாகின்றன. 3 மணி நேரம் தண்ணீர் எடுத்தால் மட்டுமே ஒரு ஏக்கரில் பாதி பயிர்களுக்கு தண்ணீர் செல்வதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Tags : paddy canal ,canal ,Paddy , Paddy Canal Shop, Black Crop, Farmers
× RELATED திருவெண்ணெய்நல்லூர் அருகே கோடை காலத்திலும் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்