×

ஊரடங்கு அமலால் சரக்குகள் கிடைக்காமல் மாதக்கணக்கில் ஓடாமல் சாலையோரம் நிறுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான லாரிகள்: உரிமையாளர்களுக்கு பல கோடி வருவாய் பாதிப்பு

சேலம்: ஊரடங்கு அமலால் ஆயிரக்கணக்கான லாரிகள் சரக்கு கிடைக்காமல் மாதக்கணக்கில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் ஓடுகின்றன. இதைதவிர மணல்லாரி, ஜல்லிகற்கள் ஏற்றிச்செல்லும் லாரி,டிப்பர் லாரி, போர்வெல் லாரிகள் என ஆயிரக்கணக்கில் உள்ளன. இதில் தமிழகத்தில் இருந்து ஜவ்வரிசி, ஸ்டார்ச், மஞ்சள், இரும்புக்கம்பி, கோழித்தீவனம், அரிசி உள்பட பல வகையான பொருட்கள் வெளி மாநிலங்களுக்கு சரக்குகள் கொண்டு செல்லப்படுகிறது. அதேபோல் மகாராஷ்டிரா,குஜராத்,மத்தியபிரதேசம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் துவரை, உளுந்து, கொண்டைக்கடலை, பெரிய வெங்காயம், பூண்டு, கொத்தமல்லி, வத்தல்மிளகாய் உள்பட வகையான பொருட்கள் தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது.லாரிகளில் சரக்குகள் செல்ல அந்தந்த வழித்தடத்திற்கு தூரத்திற்கு ஏற்ப கட்டணம் நிர்ணயம் செய்து வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது.

லாரி தொழிலை பொறுத்தவரை  டீசல் விலை ஏறும்போது,லாரிகள் நிறுத்தம்,போராட்டம் என்று நடக்கும். மற்ற நாட்களில் இடைவெளி இல்லாமல் லாரிகள் இயங்கி வரும்.இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவியதில் இருந்தே லாரி தொழில் நசிந்து வருகிறது. தற்போது இ-பாஸ் பிரச்னை,டீசல், டோல் கட்டணம் உயர்வால் பல லாரி உரிமையாளர்கள் லாரிகளை இயக்க மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பால் லாரிகளுக்கு முறையாக சரக்குகள் கிடைப்பதில்லை.இதனால் பல்லாயிரம் லாரிகள் ஆங்காங்கே லாரி ஷெட்டுகள், சாலையோரங்களில் வாரக்கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சேலத்தை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் கூறியதாவது: தமிழகத்தில் லாரி தொழிலை நம்பி உரிமையாளர்கள்,சரக்கு புக்கிங் ஆபீஸ்,டிரைவர்,கிளீனர், சுமை தூக்குவோர் என லட்சக்கணக்கானோர் உள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவியதில் இருந்தே லாரிகள் இயக்குவதற்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.வௌி மாநிலங்களில் இருந்து சரக்கு எடுத்து வரும் லாரிகள்,அதேபோல் இங்கிருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் லாரிகள் கட்டாயம் இ பாஸ் எடுத்து இருக்க வேண்டும் என்று உத்தரவு உள்ளது. மேலும் ஊரடங்கு அமலால் பல தொழிற்சாலைகள் இன்னும் முழுமையாக செயல்படாமல் உள்ளன. இதனால் வழக்கமாக கிடைத்து வந்த சரக்குகளில் 50 சதவீத சரக்குகள் மட்டுமே கிடைக்கின்றன. இதன் காரணமாக பாதி லாரிகள் மட்டுமே ஓடுகின்றன.மீதமுள்ள லாரிகள் சரக்கு கிடைக்காததால் வாரக்கணக்கில்  சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.இந்த லாரிகளில் வேலை செய்த டிரைவர், கிளீனர்,சுமை தூக்குவோர் என பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

லாரிகள் ஓடினாலும் சரி,நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தாலும் சரி மூன்று மாதத்திற்கு ஒருமுறை சாலைவரி,இன்சூரன்ஸ் போன்றவற்றை முறையாக கட்ட வேண்டும். இவற்றை முறையாக கட்டவில்லை என்றால் லாரிகள் இயக்குவது கஷ்டம்.கொரோனா வைரஸ் பரவால் கடந்த மூன்று மாதமாக சரிவர சரக்குகள் கிடைக்கவில்லை. ஆனாலும் லாரி உரிமையாளர்கள் சாலைவரி,இன்சூரன்ஸ் உள்ளிட்டவைகளை செலுத்தி வருகின்றனர்.இது போன்ற பல்வேறு சிரமங்களால் கடந்த மூன்று மாதத்தில் மட்டும் லாரி உரிமையாளர்களுக்கு பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு லாரி உரிமையாளர்கள் கூறினர்.



Tags : road , Curfew, trucks, revenue impact
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...