×

கொரோனா காலத்தில் இப்படியும் ஒரு கொள்ளை: ரேஷன் கடைகளில் இலவச அரிசி வழங்குவதில் மெகா ஊழல்

* கள்ளச்சந்தையில் விற்கும் கொடுமை
* ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் அரசு

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் தமிழகம் முழுவதும் கடந்த 100 நாட்களாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பெரும்பாலோனோர் வேலைக்கு செல்ல முடியாமல் போதிய வருமானமின்றி தவித்து வருகின்றனர். இதை மனதில் வைத்துக் கொண்டு தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ,1000 நிதியுதவியும், இலவச அரிசி, பருப்பு, எண்ணெய் ஆகியவையும் வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் மூன்று மாதகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. அரிசியை பொறுத்தவரை அந்தியோத்தியா, அன்ன யோஜனா (ஏஏஒய்) பட்டியலில் இருந்து வரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு தனது தொகுப்பில் இருந்து நபர் ஒருவருக்கு 5 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்தது. இதை தொடர்ந்து தமிழகத்திற்கு 3 கோடியே 71 லட்சம் மெட்ரிக் டன் அரசி வழங்கி உள்ளது.

இதனையடுத்து, மாநில அரசு தனது பங்கிற்கு முன்னுரிமை அல்லாத குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதலாக நபர் ஒருவருக்கு தலா 5 கிலோ வீதம் வழங்குவதற்காக ரூ.22 விலையில் மத்திய அரசிடமிருந்து 2 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை ரூ 440 கோடி விலையில் வாங்கியது. இதனையடுத்து அரிசி விநியோகம் தற்போது 3 மாதகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்தவாறு குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதலாக அரிசி வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. 3 மாதமாக ஏழைகளுக்கு வழங்கப்படும் அரிசி கொள்ளையடிக்கப்பட்டு வெளிமார்க்கெட்டில் விற்கப்படுகிறது. குறிப்பாக, ஒரு நபர் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே 12 கிலோ அரிசி வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கூடுதலாக 5 கிலோ அரிசி சேர்த்து மொத்தம் 17 கிலோ வழங்கப்படுவதற்கு பதில் 7 கிலோ மட்டுமே வழங்கப்பட்டு வருகி றது. பெரும்பாலான இடங்களில் வெறும் 7 கிலோ அரிசியும், ஒரு சில இடங்களில் மட்டும் இந்த ஒரு நபர் கார்டுக்கு வழங்கமான 7 கிலோ என்றும் கூடுதல் அரிசி 5 கிலோ என்றும் பிரித்து வழங்கப்பட்டு குடும்ப அட்டைதாரர்கள் ஏமாற்றபட்டு வருகின்றனர்.

இதே போல், 2 நபர் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே 16 கிலோ அரிசி வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கூடுதலாக 10 கிலோ சேர்த்து 26 கிலோ வழங்கப்படுவதற்கு பதில் 12 மற்றும் 10 கிலோ என்ற அடிப்படையில் 22 கிலோ மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் மாநில அரசு தெரிவித்துள்ளவாறு கூடுதல் அரிசி வழங்கப்படுவதில்லை என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும், குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கான கூடுதல் அரிசியை கேட்டு கடை விற்பனையாளர்களிடம் தகராறில் ஈடுபடும் போது மின்னணு இயந்திரத்தில் உள்ளவாறு தான் அரிசி வழங்கப்படும் என விற்பனையாளர்கள் தெரிவித்து வருகின்றனர். ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட உணவுப் பொருட் களை நம்பித்தான் ஏழை எளிய, கிராமப்புற, நகர்ப்புற மக்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதில் அரிசி விநியோகத்தில் அளவை பெருமளவு குறைத்தும், தரமற்ற அரிசியை மக்களுக்கு வழங்கி விட்டு தரமான அரிசியை சில ஊழியர்கள், சில அதிகாரிகள் இணைந்து வெளி மார்க்கெட்களில் கள்ளத்தனமாக விற்பனை செய்து ஊழலில் ஈடுபடுவதாக நேர்மையான பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

தமிழக முழுவதும் சுமார் 2 கோடி ரேஷன் அட்டைகள் உள்ளன. இதில் 10 சதவீத குடும்பத்தினர் எந்தவிதமான பொருட்களையும் வாங்குவதில்லை என கூறப்படுகிறது. சுமார் 5 லட்சம் அட்டைத்தார்கள் சர்க்கரை மட்டுமே வாங்குகின்றனர். இந்நிலையில் கொரோனா காலத்தில் மக்களுக்கு வழங்கபட வேண்டிய அரிசியின் அளவு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 3 மாத காலமாக மத்திய தொகுப்பில் இருந்து வந்த அரிசி வெளி மார்க்கெட்டில் முறைகேடாக விற்பனை செய்யப்பட்டுள்ளதன் மூலம் ரூ பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் பகீர் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி கூறுகையில்: மாவட்டத்தில் 721 ரேஷன் கடைகள் செயல்படுகிறது. சுமார் 3.69 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. ஊரடங்கு காரணமாக மத்திய தொகுப்பில் இருந்து நபர் ஒருவருக்கு 5 கிலோ அரிசியும், மாநில தொகுப்பில் இருந்து நபர் ஒருவருக்கு தலா 5 கிலோ அரிசியும் வழங்கப்படுவதாக அரசு கூறுகிறது. ஆனால் நடைமுறையில் அவ்வாறு வழங்கப்படுவதில்லை என்பது முற்றிலும் உண்மையே.

குறிப்பாக மத்திய தொகுப்பில் இருந்து வரும் அரிசி மக்களுக்கு விநியோகம் செய்யப்படுவதில்லை. வழக்கமாக ஒரு நபர் கார்டுகளுக்கு ஏற்கனவே 12 கிலோ அரிசி வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கூடுதலாக 5 கிலோ அரிசி சேர்த்து மொத்தம் 17 கிலோ வழங்கப்படுவதற்கு பதில் 7 கிலோ மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இதே போல், 2 நபர் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே 16 கிலோ அரிசி வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கூடுதலாக 10 கிலோ சேர்த்து 26 கிலோ வழங்கப்படுவதற்கு பதில் 12 மற்றும் 10 கிலோ என்ற அடிப்படையில் 22 கிலோ மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. மத்திய தொகுப்பில் இருந்து வரும் தரமான அரிசி மக்களுக்கு விநியோகம் செய்யப்படாமல் வெளி மார்க்கெட்டில் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுகிறோதோ என்ற அய்யம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் மாநில அரசின் தொகுப்பில் இருந்து வழங்கபடும் அரிசியும் தரமானதாக இல்லை.

இதனால் பெரும்பாலான மக்கள் அரிசியை ரேஷன் கடைகளில் வாங்குவதில்லை. அவ்வாறு பொதுமக்களால் புறக்கணிக்கப்படும் தரமற்ற அரிசி பட்டை தீட்டப்பட்டு வெளி மார்க்கெட்டில் விற்பனைக்கு அனுப்பப்படுவதாக தெரிகிறது. எனவே, மாநில அரசு தரமான அரிசியை அளவை குறைக்காமல் மக்களுக்கு விநியோகம் செய்யப்படுவதை முதலில் உறுதிப்படுத்த வேண்டும். மேலும் கொரோனா காலத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அரசு வெளிப்படை தன்மையுடன் மக்கள் மத்தியில் அறிவிப்பு செய்ய வேண்டும் என்றார்.

குடும்ப அட்டைதாரர்கள்
தங்களுக்கான கூடுதல் அரிசியை கேட்டு கடை விற்பனையாளர்களிடம் தகராறில் ஈடுபடும் போது மின்னணு இயந்திரத்தில் உள்ளவாறு தான் அரிசி வழங்கப்படும் என விற்பனையாளர்கள் தெரிவித்து வருகின்றனர். கடந்த 3 மாத காலமாக மத்திய தொகுப்பில் இருந்து வந்த அரிசி வெளி மார்க்கெட்டில் முறைகேடாக விற்பனை செய்யப்பட்டுள்ளதன் மூலம் ரூ பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது.

Tags : robbery ,scandal ,Corona ,shops , Corona, loot, ration shop, free rice, mega scam
× RELATED திண்டுக்கலில் பெட்ரோல் பங்க்...