×

சாக்கு இல்லை... லாரி வரவில்லை... அரசு கொள்முதல் நிலையத்தில் மழையில் சேதமான நெல்மணிகள்: அதிகாரிகள் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு

மன்னார்குடி: திருவாரூர் அருகே விவசாயிகளால் கொண்டு வரப்பட்ட 2ஆயிரம் நெல்முட்டைகளை அரசு கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகளால் கொள்முதல் செய்யப்படாத நிலையில் திடீரென பெய்த மழையால் நெல் மணிகள் நனைந்து சேதமானதாக விவசாயிகள் குற்றச்சாட்டியுள்ளனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தென்பரை கிராமத்தில் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. பாளையக்கோட்டை, குறிச்சி, தென்பரை உள்ளிட்ட 15 கிராமங்களிலிருந்து பம்புசெட் மூலம் குறுவை சாகுபடி நடந்தது. அறுவடை செய்யப்பட்ட 2ஆயிரம் நெல் மூட்டைகளை இந்த கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்து விவசாயிகள் கொட்டி வைத்தனர். இதில் விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை கொள்முதல் செய்வதற்கு சாக்கு இல்லை, லாரி வரவில்லை என அதிகாரிகள் தொடர்ந்து கூறி வருவதால் செய்வதறியாது திகைத்த விவசாயிகள் கடந்த 15 நாட்களுக்கு மேலாக தங்களின் நெல்லை பல இடங்களில் கொட்டி வைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு தென்பரை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. திடீரென பெய்த மழையால் திறந்த வெளியில் எடை போடாமல் ஆங்காங்கே தரையில் கொட்டி வைத்திருந்த நெல் மணிகள் முழுவதுமாக நனைந்து நாசமானது. இதில் ஒரு சில விவசாயிகள் தார்பாய்கள் கொண்டு நெல்லை மூடியிருந்தாலும் பெரும்பாலான நெல் மணிகள் மழையில் நனைந்து வீணாகி விட்டன. இந்த நெல்மணிகளை சுற்றி தேங்கி இருந்த தண்ணீரை விவசாயிகளே மண்வெட்டி வைத்தும், கையாலும் அள்ளி வெளியேற்றி வருகின்றனர். விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை முறையாக கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருவதால் தான் மழைக்கு நெல் முழுவதும் நனைந்து வீணாகி வருவதாக விவசாயிகள் குற்றச்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தென்பரை கிராமத்தில் உள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையத்திற்கு தட்டுப்பாடு இல்லாமல் சாக்கு வழங்க வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகளை உடனடியாக குடோனுக்கு எடுத்து செல்ல அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மழையில் நனைந்து வீணான நெல்லுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.

Tags : government procurement station ,paddy fields , Freight, truck, government procurement station, paddy fields, farmers' charge
× RELATED கல்குவாரி லாரி மோதி கூலிதொழிலாளி கால்...