×

டெல்லியில் மிகமிக குறைந்த நோயாளிகளுக்கே மருத்துவமனை தேவை...! 10,000 படுக்கைகள் காலியாக உள்ளது: முதல்வர் கெஜ்ரிவால்

டெல்லி: கொரோனா நோயாளிகளுக்காக 10,000 படுக்கைகள் காலியாக உள்ளதாகவும், பெரும்பாலானோர் வீடுகளிலேயே குணமடைவதாகவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் இதுவரை 97,200 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,923 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட மாநில பட்டியலில் டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. இதனால் மத்திய அரசுடன் இணைந்து கொரோனாவை தடுக்கும் பணியில் டெல்லி அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இதனால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அதிகரிக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் லேசான மற்றும் மிதமான அறிகுறிகளுடன் காணப்படும் கொரோனா நோயாளிகள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில் பெரும்பாலானோர் வீடுகளிலேயே குணமடைந்து விடுவதால், மருத்துவமனைகளில் 10,000 படுக்கைகள் காலியாக உள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘டெல்லியில் தற்போது மிகவும் குறைவான நோயாளிகளுக்கே மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுகிறது. அதிகமானோர் வீடுகளிலேயே குணமடைந்து விடுகின்றனர்.

கடந்த வாரத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தினமும் சுமார் 2,300-ஐ எட்டிய போதிலும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 6,200ல் இருந்து 5,300 ஆக குறைந்தது. இன்று 9,900 கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் காலியாக உள்ளன’ என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். டெல்லியில் கடந்த சில நாட்களாக மருத்துவ பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், 45 சதவீதம் கடந்த 16 நாட்களில் மேற்கொள்ளப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைவோர் விகிதம் 70% ஆக அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Tags : Kejriwal ,Delhi ,hospital , Delhi, Patients, Hospital, Beds, Chief Minister Kejriwal
× RELATED டெல்லியில் குடியரசுத்தலைவர் ஆட்சியை...