×

ஆன்லைனில் அரை மணி நேர வகுப்பு எடுத்துவிட்டு கட்டணம் செலுத்த கோரி தனியார் பள்ளிகள் நெருக்கடி: மாணவர்களின் பெற்றோர் புலம்பல்

புழல்: புழல், செங்குன்றம் பகுதிகளில் ஆன்லைனில் அரை மணி நேர வகுப்பு எடுத்துவிட்டு, கல்விக் கட்டணம் செலுத்த கோரி தனியார் பள்ளிகள் நெருக்கடி தருவதாக மாணவர்களின் பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர்.சென்னை புழல், சூரப்பட்டு, ரெட்டேரி, லட்சுமிபுரம், கதிர்வேடு, கிரான்ட்லைன், செங்குன்றம், காந்தி நகர், பாடியநல்லூர், எம்ஏ நகர், சோழவரம், காரனோடை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் உள்ளன. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்ற தனியார் பள்ளிகளை மூடும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் புழல், செங்குன்றம், சோழவரம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தனியார் பள்ளிகள் ஆன்லைன் வழியாக தினமும் அரை மணி நேரம் மட்டும் மாணவ மாணவிகளுக்கு  பாடம் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. மேற்கண்ட தனியார் பள்ளிகள், ஆசிரியர்கள் மூலம் மாணவர்களின் பெற்றோர்களை செல்போனில் அழைத்து, கல்வி கட்டணம் செலுத்த வேண்டும், அதுவும் உடனடியாக செலுத்த வேண்டும், என உத்தரவிட்டுள்ளன. இதனால் பெற்றோர்கள் பெரிதும் மன உளைச்சலில் உள்ளனர்.

இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறுகையில்,  ‘‘பள்ளி எப்போது திறக்கப்படும் என்பதே கேள்விக்குறியாக உள்ளது. ஆனால் மாணவர்களுக்கு ஏற்கனவே புத்தகம் மற்றும் சீருடை ஆகியவற்றுக்கு பெரும்பாலான பெற்றோர்கள் பணம் செலுத்தி விட்டனர். ஒரு சில பெற்றோர் மட்டுமே கட்டணம் கட்டவில்லை என கூறப்படுகிறது. தற்போது பள்ளி நிர்வாகத்தினர் நேரடியாக கட்டணம் கேட்காமல், ஆசிரியர்கள் மூலம் எங்களை கட்டணம் செலுத்த வேண்டுமென அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு வற்புறுத்தி வருகின்றனர். இந்த கொரோனா காலத்தில் நாங்களும் வேலை இல்லாமலும், வருமானம் இன்றியும் அவதிப்பட்டு வருகிறோம். இந்நிலையில் தனியார் பள்ளி நிர்வாகம் எங்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.

புத்தகமே வரவில்லை, சீருடையும் வழங்கவில்லை. கட்டணம் மட்டும் செலுத்தும்படி வறுபுறுத்தினால் நாங்கள் எப்படி செலுத்த முடியும். நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு வகுப்பு எடுக்கும்படி கேட்கவேயில்லை. அவர்களாகத்தான் வகுப்பு எடுக்கின்றனர். கட்டணம் கேட்கின்றனர். எனவே  தமிழக அரசு மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், மேற்கண்ட தனியார் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.


Tags : Parents ,crisis ,schools , Online tuition, fees, private schools, students
× RELATED ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதத்தில்...