×

ரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்க்க டெண்டர்: மக்களும், ரயில்வே தொழிலாளர்களும் ஒன்றுபட்டு போராட முன்வர வேண்டும்

* ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை

சென்னை: ரயில் பயணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை : இந்தியாவில் 151 பயணிகள் ரயில்கள் மற்றும் 109 வழித்தடங்களை தனியாருக்கு விட  விண்ணப்பங்கள் கோரி ரயில்வே அமைச்சகம் டெண்டர் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே நிதி ஆயோக் அறிவித்த அதே வழித்தடங்களில்  இந்த 151  ரயில்கள் தனியாருக்கு விடப்படும். மேலும் 35 ஆண்டுகளுக்கு லைசென்ஸ் தரப்படும். அவர்களே கட்டணங்களை நிர்ணயித்துக் கொள்ளலாம்.  டிரைவரும், கார்டும்  மட்டும் ரயில்வே ஊழியர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் தனியார் ஊழியர்களாக இருப்பார்கள். இந்த ரயில்கள் நவீன தொடர்  வண்டிகளாக இருக்கும். ரயில்கள் 16 கோச்சுடன் 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். இதையடுத்து இந்த ரயில்கள் சாதாரண மக்களுக்கான  வண்டிகளாக இருக்கப் போவதில்லை.

தற்போது, அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தனியாருக்கு விருப்பமான நேரத்தில் வண்டிகள் ஓட்டிக்கொள்ள  அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள இந்த ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி தங்கள் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள  ரயில்வே அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனால் இந்திய ரயில்வேயின் லட்சியங்களில் அதாவது வேகமான பாதுகாப்பான  கட்டுப்படியான ரயில்கள் என்ற லட்சியம் தூக்கி எறியப்படுகிறது.  மேலும் 151 ரயில்களில் தெற்கு ரயில்வேக்கு பதினோரு ரயில்கள்  ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் தாம்பரத்திலிருந்து கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, திருச்சி, பெங்களூரு ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் 5  ரயில்கள் தனியாருக்கு ஒதுக்கப்படும். இதன் மூலம் தாம்பரம் ரயில் நிலையம் தனியார் மயமாக மாறிவிடும் வாய்ப்புள்ளளது.

அதைபோன்று சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 6 ரயில்கள் தனியாருக்கு விடப்படும். கோயம்புத்தூர், ஐதராபாத், மும்பை, ஹவுரா, டெல்லி,  ஜோத்பூர் ஆகிய இடங்களுக்கு தனியார் ரயில்கள் விடப்படும். அதுவும் அவர்களுக்கு வசதியான நேரம் ஒதுக்கப்படும். வருமானத்திற்காக அனைத்து  ரயில்களையும் உயர் வகுப்பு வண்டிகளாக மாற்றிக் கொள்வார்கள். கட்டணங்களும் கடுமையாக இருக்கும். மக்களுக்கு வேறு வழி இல்லை என்கிற  நிலைமையை உருவாக்கி அந்த ரயில்களில்தான் பயணிக்க வேண்டும் என்று நிலையை உருவாக்கி தனியாருக்கு லாபம் ஏற்படுத்திக் கொடுக்க  ரயில்வே வழிவகுக்கும்.

இந்த தனியார்மயம் மூலம் ஏழை மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். அத்துடன் ஏற்கனவே நிதியமைச்சகம் உருவாக்கியுள்ள அடிப்படை கட்டமைப்பு  திட்ட பாதை என்ற திட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி 2025ல் 500 தனியார் ரயில்கள் ஓட்ட அரசு முடிவெடுத்துள்ளது. மேலும் 30 சதவீதம் சரக்கு  போக்குவரத்தும் தனியாரிடம் ஒப்படைக்க முடிவெடுத்துள்ளது. 750 ரயில் நிலையங்களில் 30 சதவீதம் ரயில் நிலையங்கள் தனியாரிடம்  ஒப்படைக்கப்படும் என்று திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அமல்படுத்தப்படும் என்பது இப்போது உறுதியாகி உள்ளது. மற்ற பொதுத்  துறைகளை வேகமாக தனியார்மயமாக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக இது இருக்கிறது. எனவே அனைத்து பொதுமக்கள் மற்றும்  ரயில்வே தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றுபட்டு போராட முன்வர வேண்டும்.

Tags : railway workers , Railway Department, Tender, Railway Workers
× RELATED ரயில்வே தொழிலாளர் 15,600 பேருக்கு இலவச உணவு