×

மக்கள் பசி பட்டினிக்கு ஆளாகாமல் ஊரடங்கிற்கு முடிவு காணப்பட வேண்டும்: வணிகர் சங்க பேரமைப்பு கோரிக்கை

சென்னை: வணிகர்களும், மக்களும் பசி பட்டினிக்கு ஆளாகாமல் ஊரடங்கிற்கு முடிவு காணப்பட வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்  பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கொரோனா பேரிடர் நோய் தொற்றால்  ஊரடங்கு, 144 தடை உத்தரவு என பல்வேறு உத்தரவுகளை அரசு பிறப்பித்து 100 நாட்களுக்கு மேலாக கடந்து கொண்டிருக் கின்றோம்.  இப்பேரிடர்  காலத்தில் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது வணிகர்களும் தொழில் கூடங்களும், தயாரிப்பாளர்களும், வணிக நிறுவனங்கள் சார்ந்த கூலித்  தொழிலாளர்கள், சுமை தூக்குவோர், வாகன ஓட்டிகள் என 80 சதவிகித மக்கள் ஆவர்.

ஏனைய தொழில் செய்வோர்கள், பெரிய மால்கள், உணவகங்கள், பெரிய ஸ்டார் ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், சுற்றுலாத்துறை சார்ந்த தொழில்  முனைவோர் என பல தரப்பினரும், பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் ஜூலை 6ம் தேதி முதல் மீண்டும் தளர்வுகளுடன் வணிக  நிறுவனங்கள் செயல்படலாம் என அரசு அறிவிப்பாணை வெளியிட்டிருக்கிறது.  அரசின் அறிவிப்பு வெறும் அரசாணையுடன் மட்டுமே நின்றுவிடாமல்  சிறப்பாக செயலாற்றும் வணிகர்களின் நலனையும் கருத்தில் கொண்டு, திறந்து செயல்பட இருக்கும் நிறுவனங்கள், வெவ்வேறு துறை சார்ந்த அரசு  அதிகாரிகளின் அச்சுறுத்தல்கள், விதி மீறல்கள், நீதிக்கு புறம்பான நடவடிக்கைகள், அவதூறுகள், அபராதக் கட்டணங்கள், கடைகளுக்கு சீல் வைத்தல்  போன்றவற்றை அடியோடு களைந்து வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட உரிய அறிவுறுத்தல்களுடன் கூடிய விழிப்புணர்வோடும்  செயல்படுத்த வேண்டும்.  

சிறு-குறு வணிகர்கள், கூலித் தொழிலாளர்கள் பசி பட்டினிக்கு தள்ளப்படும் சூழ்நிலை உருவாகிக் கொண்டிருப்பதை அரசு கவனத்தில் கொள்ள  வேண்டும். மேலும், சாத்தான்குளம் தந்தை-மகன் இரட்டைக்கொலை வழக்கு சம்பவத்தை பொறுத்தவரை, மதுரை நீதியரசரின் ஆணைகளும், தமிழக  அரசு சிறப்பு புலனாய்வு பிரிவு எடுத்துவரும் நடவடிக்கைகளும் மிகுந்த பாராட்டுக்குரியவை. இச்சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள், காவல்துறை  அதிகாரிகள் இவர்களின் பின்புலத்தை ஆராய்ந்து, அவர்கள் பணியில் சேருவதற்குமுன் வைத்திருந்த சொத்து மதிப்பையும், பணியில் சேர்ந்த பின்,  சேர்த்திருக்கின்ற சொத்துக்கள் மதிப்பீட்டையும் கணக்கிட்டு, வருவாய்க்கு அதிகமாக சொத்துக்கள் இருப்பின், அரசு உடனடியாக பறிமுதல்  செய்வதற்கான நடவடிக்கையை துரிதமாக எடுக்க வேண்டும். சாத்தான்குளம் இரட்டைகொலை சம்பவம் போல், மீண்டும் தமிழகத்தில் எங்கும்  நடந்துவிடாமல் பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவிக்க வேண்டும். இவ்வாறு ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : People, Curfew, Merchants Association
× RELATED சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 87.13% மாணவ, மாணவியர் தேர்ச்சி: 56 பேர் 100/100