×

எல்லையில் சீன ராணுவம் ஊடுருவியதாக லடாக் மக்கள் சொல்வதை புறக்கணித்தால் பேரழிவு: மத்திய அரசுக்கு ராகுல் எச்சரிக்கை

புதுடெல்லி: ‘சீன ராணுவம் லடாக் எல்லைக்குள் ஊடுருவியதாக லடாக் மக்கள் கூறுகின்றனர். நாட்டின் நலனுக்காக அவர்கள் சொல்வதை கேளுங்கள்.  இல்லையென்றால், பேரழிவை சந்திக்க நேரிடும்’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீறி ஊடுருவிய சீனா நடத்திய தாக்குதலில், 20 இந்திய வீரர்கள் வீர மரணமடைந்தனர்.  வீரர்களின் மரணத்திற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று கூறிய பிரதமர் மோடி, லடாக்கில் இந்திய பகுதியை யாரும் ஆக்கிரமிக்கவில்லை என்று  கூறினார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதனிடையே, நேற்று முன்தினம் ராகுல்காந்தி அவரது டிவிட்டர் பதிவில், இந்தியாவின் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்திருப்பதாக லடாக் மக்கள்  கூறுகின்றனர். ஆனால் யாரும் ஆக்கிரமிக்கவில்லை என்று பிரதமர் கூறுகிறார். அப்படியானால், யாராவது ஒருவர் பொய் சொல்கிறார்கள் என்று தானே  அர்த்தம்’’ எனக் கூறி, லடாக் மக்களின் குரல் பதிவை இணைத்திருந்தார். இந்நிலையில், ராகுல் அவரது நேற்றைய டிவிட்டரில், தேசப்பற்றுடைய  லடாக் மக்கள் சீன ஊடுருவலுக்கு எதிராக குரல் கொடுக்கின்றனர். அவர்கள் கூறுவதை புறக்கணிக்காமல், நாட்டின் நலனுக்காக செவி கொடுத்து  கேளுங்கள். இல்லையென்றால், பேரழிவை சந்திக்க நேரிடும்’’ என்று கூறியுள்ளார்.

உணர்வுக்கு மதிப்பளியுங்கள்
லடாக் ஆக்கிரமிப்பு குறித்து காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா அவரது டிவிட்டரில், ஆயிரக்கணக்கான தேசபற்று கொண்ட லடாக் மக்கள்  தங்களது நிலத்தை சீனா ஆக்கிரமித்து இருப்பதாக கூறியுள்ளனர். தாய்நாட்டை பாதுகாக்கும் நோக்கத்துடன், மத்திய அரசு அவர்களது உணர்வுகளுக்கு  மதிப்பளித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறி, லடாக்கை சேர்ந்த ஒருவர், கடந்த இரண்டு மாதங்களாக சீனாவின் ஊடுருவல்  அதிகரித்து வருகிறது என பேசும் வீடியோவை இணைத்து பதிவிட்டுள்ளார்.


Tags : Disaster ,Rahul ,Ladakh ,Chinese ,border ,army ,government , Chinese Army, Ladakh, Central Government, Rahul
× RELATED அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்