×

சென்னையை போன்று அங்கேயும் பீதி: பெங்களூருவை காலி செய்து சொந்த ஊர் திரும்பும் மக்கள்: துமகூரு சாலையில் பலமணி நேரம் வாகன நெரிசல்

பெங்களூரு: கொரோனா பீதியால் பெங்களூருவில் வசித்து வரும் மக்கள் வீடுகளை காலி  செய்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்புகிறார்கள். இதனால்  பெங்களூரு-துமகூரு  சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் முட்டி மோதின. சென்னையில்  கொரோனா தொற்று அதிகரித்ததை  தொடர்ந்து அங்கிருந்த மக்கள் கூட்டம் கூட்டமாக  சொந்த ஊருக்கும், வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கும் சாரை சாரையாக   படையெடுத்த செய்தி பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் சமீபத்தில் வெளியாகி  பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதேபோல  பெங்களூருவில்  வசித்து வந்தவர்கள், கொரோனா தொற்று அதிகரிப்பால் ஏற்பட்ட பீதி காரணமாக  சொந்த ஊருக்கு திரும்புகிறார்கள்.

மாநிலத்தில் தினமும் கொரோனா தொற்று  அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாநில தலைநகரான பெங்களூருவிலும் தொற்று  அதிகரித்து பலி  எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இது மக்கள் மத்தியில்  அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே மாநில அரசு இரவு 8 மணி முதல்   காலை 5 மணி வரை ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு லாக்டவுன் என்று  அறிவித்துள்ளது. இது மக்கள் மத்தியில் மேலும் அச்சத்தை  ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில்  கொரோனா வைரஸ் பாதிப்பு மத்தியிலும் 10-ம் வகுப்பு தேர்வு  முடிவடைந்துள்ளதால் எந்த நேரத்திலும்  மாநிலத்தில் மறுபடியும் லாக்டவுன்  செய்யப்படும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.  

இதனால் வேலை தேடிக்கொண்டு  பெங்களூருவிற்கு வந்த வெளிமாவட்ட தொழிலாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள்  உட்பட பலர் தங்களின்  வீடுகளை காலி செய்து விட்டு மூட்டை முடிச்சுகளுடன்   சொந்த ஊர்களுக்கு வாகனங்களில் திரும்புகிறார்கள். அதேபோல் சிலர் பைக்  மற்றும்  சரக்கு வாகனங்களில் சென்றனர். இதனால் பெங்களூரு-துமகூரு  சாலையில் பல மணி நேரம் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து தடைபட்டது.   இந்நிலையில் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் கொரோனா வைரஸ் அச்சத்தால் சொந்த  கிராமங்களுக்கு வருகை தருவதால் தங்களுக்கு பாதிப்பு  ஏற்படுமே என்ற  அச்சத்தில் கிராமத்தினர் உள்ளனர்.



Tags : Chennai ,Bangalore ,home ,road ,Tumkur ,hometowns , Chennai, Bangalore, Dumakuru Road, Traffic
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பு – தமிழ்நாட்டில் NIA சோதனை