×

கர்நாடகா பக்தர்களுக்காக திருப்பதியில் 200 கோடியில் ஓய்வறை கட்டிடம்: எடியூரப்பா தகவல்

திருமலை: கர்நாடகாவிலிருந்து வரும் பக்தர்களுக்காக திருப்பதியில் 200 கோடி மதிப்பில் ஓய்வறை கட்டிடம் கட்டப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஒப்புதல் அளித்தார். திருமலையில் உள்ள 7.05 ஏக்கர் நிலத்தை கடந்த 2008ம் ஆண்டு கர்நாடக அரசுக்கு தேவஸ்தானம் 50 ஆண்டுக்கு குத்தகைக்கு வழங்கியது.  இப்பகுதியில், புதிய பக்தர்கள் ஓய்வறை கட்டுவதற்கு தேவஸ்தானத்திடம் கர்நாடக அரசு அனுமதி கேட்கப்பட்டது. இந்நிலையில் புதிய பக்தர்கள் ஓய்வறை கட்டுவது தொடர்பான ஆலோசனை கூட்டம்  முதல்வர் எடியூரப்பா தலைமையில் நேற்று நடந்தது. தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர்   சுப்பாரெட்டி, செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால்,  கூடுதல் செயல் அலுவலர்  தர்மாரெட்டி  மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.   

கூட்டத்தில் கர்நாடகா அரசுக்கு வழங்கப்பட்ட இடத்தில் பிரமோற்சவத்தின்போது பக்தர்கள் வசதிக்காக ஏழுமலையான் கோயில் மேற்கு மாட வீதியில் 1.94 ஏக்கர் நிலத்தை காலியாக வைப்பது. மீதமுள்ள இடத்தில் 200 கோடியில் பக்தர்கள் ஓய்வறை கட்டுவது என முடிவு செய்யப்பட்டது. இப்பணியை கர்நாடக முதல்வர் எடியூரப்பா, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி ஆகியோர் விரைவில் தொடங்கி வைப்பார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக அரசும் பரிந்துரை
ஏழுமலையானை அதிகளவில் தரிசிக்க வரும் தமிழக பக்தர்களின் பயன்பாட்டிற்காக திருப்பதியில் தமிழக அரசு சார்பில் விருந்தினர் மாளிகை, ஓய்வறைகள் ஏதுமில்லை.  இந்த கோயில் உருவாக காரணமாக இருந்த வைணவ குரு ராமானுஜர் அவதரித்த தமிழகத்திலிருந்து வரும் பக்தர்கள் அறைகள் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, திருப்பதியில் தமிழக பக்தர்களின் வசதிக்காக விருந்தினர் மாளிகை, ஓய்வறைகள் கட்ட தேவஸ்தானத்திடம் அரசு சார்பில் கோரிக்கை விடப்பட உள்ளது. இதற்காக, அடுத்த மாதம் திருமலையில் அறங்காவலர் குழு கூட்டத்தின்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் அனுமதி பெற்று இதற்கான விண்ணப்பம் ஒப்புதலுக்கு வைக்க உள்ளதாக தமிழக சிறப்பு அழைப்பாளர்  சேகர்ரெட்டி தெரிவித்தார்.



Tags : devotees ,house ,Karnataka ,Yeddyurappa , Devotees of Karnataka, Tirupati, Yeddyurappa
× RELATED திருப்பதி கோயிலில் பக்தர்கள் கூட்டம்: 18 மணிநேரம் காத்திருந்து தரிசனம்