×

சென்னை உயர் நீதிமன்றம் நாளை முதல் முழுமையாக இயங்கும்: அனைத்து வழக்குகளும் காணொலியில் விசாரணை

சென்னை: கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றம் மூடப்பட்டு, அவசர வழக்குகள் மட்டும் விசாரிக்கப்பட்டன. இரு நீதிபதிகள் அடங்கிய இரண்டு அமர்வுகள், பொதுநல வழக்குகள், ஆட்கொணர்வு வழக்குகளை விசாரித்தன. அதேபோல 4 தனி நீதிபதிகள், ஜாமீன், முன் ஜாமீன், பொது வழக்குகளையும் விசாரித்து வந்தனர். இதற்கிடையில், நீதிமன்றத்தில் நேரடி விசாரணையை தொடங்கிய போது, நீதிபதிகள் சிலருக்கும், ஊழியர்கள் சிலருக்கும் கொரோனா தொற்று பரவியதை அடுத்து, மீண்டும் வீடியோ கான்பரன்ஸ் விசாரணை தொடங்கியது. நீதிபதிகள், தங்கள் வீடுகளில் இருந்தும், வக்கீல்கள் தங்கள் வீடுகளில் இருந்தும், சில நேரங்களில் சில வக்கீல்கள் தங்கள் வாகனங்களில் இருந்தும் விசாரணையில் ஆஜராகி வந்தனர். இந்த காணொலி காட்சி விசாரணையின் போது, இடையூறுகள், தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக, திறமையாக தங்கள் வாதங்களை முன்வைக்க முடியவில்லை என்று வக்கீல்கள் வேதனை தெரிவித்து வந்தனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில், நீதிமன்றங்களை திறந்து, நேரடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் செயல்பாடு குறித்து அனைத்து நீதிபதிகள் கூட்டத்தை கூட்டி தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி ஆலோசனை நடத்தினார்.  கூட்டத்தில், ஜூலை 6 முதல் அனைத்து நீதிபதிகளும் புதிய மற்றும் நிலுவை வழக்குகளையும் விசாரிப்பது எனவும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மட்டும் வழக்குகளை விசாரிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இரு நீதிபதிகள் அடங்கிய 6 அமர்வுகளும், 27 தனி நீதிபதிகளும், ஜூலை 6 முதல் வழக்கமான நடைமுறைப்படி வழக்குகளை விசாரிக்க உள்ளனர். இதேபோல மதுரைக் கிளையில், 2 நீதிபதிகள் அமர்வு இரண்டும், 9 தனி நீதிபதிகளும் வழக்குகளை விசாரிக்க உள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் அவசர வழக்குகள் மட்டும் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், ஜூலை 6 முதல் புதிய வழக்குகள், பல்வேறு நிலைகளில் நிலுவையில் உள்ள வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வது என்று நீதிபதிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : Madras High Court , Madras High Court, all cases
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...