×

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையுடன் சத்தான உணவு!: பழசாறு, முட்டை, சூப் என கவனிப்பில் அசத்தும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை!!!

மதுரை: மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகமே நாள்தோறும் சத்தான உணவை வழங்கி வருகிறது. கொரோனா பெருந்தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது ஒன்றே தப்பிக்க வழி. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சத்தான உணவு கொடுப்பது மிக மிக அவசியம். இந்த சவாலான பணியை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை சிறப்பாக செய்து வருகிறது. ஊட்டச்சத்து நிபுணர்கள் தலைமையில், மருத்துவமனை ஊழியர்களின் கண்காணிப்பில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான உணவு தயாராகிறது.

காலை, மாலை கபசுர குடிநீர், மூன்று வேலை சுடச்சுட சத்தான உணவு, முட்டை, பழசாறு, சூப், சுண்டல் என பார்த்து பார்த்து நோயாளிகளுக்கு கொடுக்கின்றனர். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சுமார் 500 பேர் கொரோனா நோய் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனை எதிரே உள்ள இடத்தில் இவர்கள் அனைவருக்கும் 40 பேர் கொண்ட குழு உணவு சமைத்து கொடுக்கிறது. 500க்கும் மேற்பட்டவர்களுக்கு தனித்தனியாக உணவு பேக்கிங் செய்யப்பட்டு கொரோனா வார்ட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த பணியில் பெண்களும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றனர். ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு, வாழைப்பழம் என உணவோடு ஒரு பழம் கட்டாயம் கொடுக்கின்றனர்.

புரதச்சத்து நிறைந்த, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அறுசுவை உணவோடு மருத்துவர்களின் கனிவான கவனிப்பும் நோயாளிகளை தேற்றி வருகிறது. பேரிடர் காலங்களில் சேவை செய்யும் முன்கள பணியாளர்களை போலவே நோயாளிகளுக்கு சத்தான உணவை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களும் பாராட்டுக்குரியவர்களே.

Tags : Corona , Corona Patient, Nutritional Food, Fruit, Egg, Soup, Madurai Rajaji Government Hospital
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...