×

வலுவின்றி உள்ளதால் கரைகள் உடையும் அபாயம் வாலாஜா ஏரியை தூர்வார வேண்டும்

* மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா?
* விவசாயிகள் எதிர்பார்ப்பு

சேத்தியாத்தோப்பு: கடலூர் மாவட்டத்தில் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வாலாஜா ஏரி என்பது ஒரு நன்னீர் ஏரியாகும். இதன் பரப்பளவு 1,664 ஏக்கர் ஆகும். 12 அடி ஆழம் தண்ணீர் தேக்கும் திறன் கொண்டதாகும். இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் உள்ள 11,362 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றது. இந்த ஏரியானது பல ஆண்டுகள் தூர்வாரப்படாமல் புதர் மண்டி காணப்பட்டது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நெய்வேலி என்எல்சி நிர்வாகம் ரூ. 14 கோடி மதிப்பீட்டில் கடந்த 2014ம் ஆண்டு தூர்வாரும் பணியினை மேற்கொண்டு ஒன்றரை ஆண்டுகள் தூர்வாரி வாலாஜா ஏரிக்கு என்எல்சி நிர்வாகம் புத்துயிர் அளித்தது குறிப்பிடதக்கது. தூர் வாரப்பட்டு 25.40 கன மீட்டர் கொள்ளளவு நீர் ஏரியில் தேக்கப்பட்டது. அதன் பின்பு வாலாஜா ஏரி கடல்போல் காட்சி அளித்து வந்தது.   வாலாஜா ஏரி, பரவனாறு ஏரி, வெள்ளாறு வடக்கு ராஜன் வாய்க்கால், தண்ணீரும் பெருமாள் ஏரிக்கு அனுப்பப்படும் தண்ணீரும் என்எல்சியிலிருந்து நிலக்கரி வெட்டி எடுக்கும் போது வெளியேற்றப்படும் உபரி நீரும் தேக்கி வைக்க உருவாக்கப்பட்டது வாலாஜா ஏரியாகும். தேக்கி வைக்கும் தண்ணீரை விவசாய பயன்பாட்டிற்காக விடப்பட்டு குறிஞ்சிப்பாடி மற்றும் புவனகிரி ஒன்றியங்களில் 11.362 ஏக்கர் விவசாய விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றது. பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள வாலாஜா ஏரி தற்போது பராமரிப்பின்றி பெரும் பகுதி தூர்ந்து நீர்பிடிப்பு வெகுவாக குறைந்து வருகின்றது.

மேலும் ஏரி மற்றும் பரவனாறு கரைகளும் வலுவிழந்து காணப்படுவதால் மீண்டும் முறையாக தூர்வாரி அதன் பரப்பளவு முழுவதும் தடுப்பு கட்டை சிமென்ட் கான்கிரீட்டால் பாதுகாப்பு சுவர் அமைக்க வேண்டும்.  ஏனெனில் கடந்த மழைக்காலங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்ட போது கரைகள் வலுவின்றி இருந்ததால் ஏரி உடையும் நிலை ஏற்பட்டது. தற்போது ஏரியின் கரைகள் மண்சரிவு ஏற்பட்டு கரைகளின் மேல் போடப்பட்ட செம்மண் சாலை விரிசல் ஏற்பட்டு வருகின்றது. ஏரியின் உள்பகுதியில் சம்பு அதிகளவில் ஓங்கி வளர்ந்துள்ளதால் அதிக தண்ணீர் தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எந்த நேரத்திலும் ஏரியின் கரைகள் உள்பக்கமாக சரிந்து விழும் ஆபத்தும், அவ்வாறு ஏற்படுமானால் இப்பகுதியில் யாரும் நடமாட முடியாத நிலையும் ஏற்படும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

 ஏரியின் கரையில் அதிகளவில் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவ மழைக்கு முன்பாக வாலாஜா ஏரியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். தூர்வார நடவடிக்கை எடுக்காவிட்டால் 50க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.  இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.  எனவே மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் வாலாஜா ஏரியினை பார்வையிட்டு ஆய்வு செய்து தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 


Tags : lake ,Walaja ,shores , Walaja lake,avoided, danger , shores ,weakness
× RELATED வாலாஜா பஸ்நிலையம் மேம்படுத்தும்...