×

வேலூர் மாவட்டத்தில் கொரோனாவை விரட்ட கொள்முதல் செய்யப்பட்டவை 4 டன் நிலவேம்பு, கபசுர குடிநீர் மக்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை

*  கடமைக்காக சில இடங்களில் வழங்கும் அவலம்
*  கண்டுகொள்ளாத மாவட்ட சித்த மருத்துவத்துறை

வேலூர்:  வேலூர் மாவட்டத்தில் கொரோனாவை விரட்ட கொள்முதல் செய்யப்பட்ட 4 டன் நிலவேம்பு, கபசுர குடிநீர் மக்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை. கடமைக்காக சில இடங்களில் வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா நோயால் இந்தியாவில் 5.97 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  17 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். அதில் தமிழகத்தில் மட்டும் பார்த்தால் 94 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் இறந்தவர்கள் 1,200க்கும் மேற்பட்டவர்கள். இப்படி கொரோனாவின் பாதிப்பு பட்டியலும், இறப்பு பட்டியலும் நாளுக்கு நாள் நீண்டுகொண்டே போகிறது. இந்த கொடிய கொரோனாவை தடுக்க ஆங்கில மருத்துவத்தைவிட சித்த மருத்துவத்தின் மூலமே குணப்படுத்தலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. அதன்படி கொரோனா பாதித்த பகுதிகளில் அரசு சார்பிலும், தன்னார்வலர்கள் சார்பிலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக நிலவேம்பு, கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் சென்னையைப்போல் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த 2 டன் கபசுரம், 2 டன் நிலவேம்பு பவுடர் கொள்முதல் செய்ய கேட்கப்பட்டது. உடனே கலெக்டர் அவசர நிதி ஒதுக்கி கபசுரம், நிலவேம்பு பவுடர் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கினார். அதன்படி கொள்முதல் செய்யப்பட்டது.

அதனை மாநகராட்சி, நகராட்சி, பிடிஓ அலுவலக அதிகாரிகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகிக்க அறிவுறுத்தப்பட்டது. அதிகாரிகளோ ஏதே ஒரு இடத்தில் மட்டும் கபசுர குடிநீர் வழங்கிவிட்டு, புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்கின்றனர். பின்னர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து கடமைக்காக கணக்கு காட்டி வருவதாக மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி குரல் ஒலிக்கத்தொடங்கியுள்ளது. தனியார் சித்த மருத்துவர்கள் பலர் தாங்களாக முன்வந்து கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் காய்ச்சி பொதுமக்களுக்கு வழங்கி சேவை செய்து வருகின்றனர். அவர்களையும் மாவட்ட நிர்வாகம் இணைத்துக்கொண்டு கொரோனாவை தடுக்க முயற்சிக்கலாம். ஆனால் மாவட்ட சித்த மருத்துவத்துறையோ, அவர்களை கண்டுகொள்வதில்லை. அரசுத்துறை சார்பில் வழங்கப்படுகிறதா? இல்லையா? என்பதையும் ஆய்வு செய்வதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துவருகிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் தனியார் சித்த மருத்துவர்கள் தாங்களாகவே முன்வந்து கபசுர குடிநீர் வழங்கி வருகின்றனர். மாவட்ட நிர்வாகமும் அவர்களை ஊக்கப்படுத்துகிறது. அதேபோல் வேலூர் மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பை தடுக்க தற்போது மிகமுக்கியமான நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய கபசுர குடிநீர் உரிய முறையில் வழங்க, சித்த மருத்துவர்களையும் இணைத்துக்கொண்டு மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்தாலோ கெரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

வைட்டமின் மாத்திரை கிடைக்கவில்லை
மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் சி மாத்திரை மற்றும் ஜிங்க் மாத்திரைகள் 2.60 லட்சம் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகிறது. ஆனால் 100 சதவீதம் மக்களுக்கு சென்றடையவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று ெபாதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.

3.63 லட்சம் வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கவில்லை
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பை தடுக்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அவசியம். எனவே வைட்டமின் மாத்திரைகளை தொடர்ந்து கபசுர குடிநீர், நிலவேம்பு, மூலிகை குடிநீர் ஆகியவற்றை வீட்டிலேயே தயாரித்து பருகுவது, மூச்சுப்பயிற்சியின் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துகொள்ளும் முறை குறித்தும், சத்தான சிற்றுண்டி வகைகள் தயாரிப்பது என்று 3.63 லட்சம் வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த நோட்டீஸ் பெரும்பாலான வீடுகளுக்கு வழங்கப்படவில்லையாம். அதனை கண்ணால் கூட பார்க்கவில்லை. எனவே பயனுள்ள அந்த நோட்டீஸ் அனைத்து வீடுகளுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Vellore ,district ,earthquake ,Kapasura ,landfill , 4 ton landfill, Kapasura ,drinking water, fully reached , Vellore
× RELATED போலீஸ்காரரை பிளேடால் வெட்டிய...