×

கொரோனாவால் முடங்கிய விமான சேவை வெளிநாட்டு மாப்பிள்ளைகள் வராததால் ஆயிரக்கணக்கான திருமணங்கள் நிறுத்தம்: மாதக்கணக்கில் காத்திருக்கும் பெண் வீட்டார்

சேலம்: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விமான போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் வெளிநாட்டில் இருந்து மாப்பிள்ளைகள் வராததால் ஆயிரக்கணக்கான திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில்  கொரோனா பரவலை தடுக்க, ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் அந்தந்த மாநிலங்களில் பாதிப்பு மற்றும் உட்கட்டமைப்புகளுக்கு ஏற்ற வகையில் போக்குவரத்து ஓரளவு இயங்கி வருகிறது. அதே நேரத்தில் வெளிநாட்டு விமான  சேவை என்பது அடியோடு ரத்து செய்யப்பட்டுள்ளது. இப்படி விமான சேவை முடங்கியுள்ளதால் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், சொந்த ஊருக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. விமான சேவை ரத்தானது, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இதில் முக்கியமாக வெளிநாடுகளில் பணியாற்றும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணமகன்கள், மணமகள்கள் உரிய நேரத்தில் ஊருக்கு வர முடியாதது பெரும் வேதனையாக மாறி உள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான  திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக திருமண அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தமிழக திருமண அமைப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: இந்தியாவில் தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா,டெல்லி, கொல்கத்தா,கர்நாடகாவை சேர்ந்த பல லட்சம் பேர் அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா,துபாய், சிங்கப்பூர்,மலேசியா,சீனா,ஜப்பான், கனடா,இத்தாலி,ஆப்பிரிக்கா, பிரான்ஸ் உள்பட பல நாடுகளில் வசித்து வருகின்றனர். இதில் குடும்பத்துடன் வசிப்பவர்கள் 20 சதவீதம் பேர் தான். மீதியுள்ள 80 சதவீதம் பேர் தனியாகவே வசித்து வருகின்றனர்.இதில் ஒரு சிலர் அங்கேயே குடியுரிமை வாங்கிக்கொண்டு,அங்குள்ள பெண்ணையோ,ஆணையோ திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றனர். ஆனால் பெரும்பாலானோர் அவர்கள் சொந்த மாநிலத்தில் வரன் பார்த்து திருமணம் செய்து கொள்கின்றனர். அந்த வகையில் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ெளிநாடுகளில் வசிக்கும் ஆண்கள், பெண்களுக்கு அவர்களின் சொந்த மாநிலத்தில் திருமணம் பேசி நிச்சயித்து முகூர்த்த தேதியை குறித்து வைத்திருந்தனர்.  இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் உலக நாடுகள் முழுவதும் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதனால் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் பல மாநிலங்களுக்கு வரவேண்டிய மணமகன்கள், மணமகள்கள் வரமுடியாமல் போனது.

இதன்காரணமாக  தமிழகத்தில் மட்டும் மார்ச்,ஏப்ரல், மே, ஜூன், நடப்பு ஜூலை மாதத்தில் நடக்க இருந்த ஆயிரக்கணக்கான திருமணங்கள் நின்று போயுள்ளன. மாப்பிள்ளை வராததால் பேசி வைக்கப்பட்டிருந்த பல திருமணங்கள் கேள்விக்குறியாகி உள்ளது. பலர் மாப்பிள்ளை வரும்போது திருமணத்தை நடத்திக்கொள்ளலாம் என்று காத்துக்கொண்டிருக்கின்றனர். எப்படியும் மாப்பிள்ளை குறித்த நேரத்தில் வந்துவிடுவார், திருமணம் நடக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த பல பெண்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

யோசிக்கும் பெற்றோர்
வெளிநாட்டு மாப்பிள்ளை என்றால் லட்சக்கணக்கில் சம்பளம் இருக்கும். சொகுசு வாழ்க்கை வாழலாம் என்று பலர், வெளிநாட்டு மாப்பிள்ளைகளை தேடி பிடித்து பெண்ணை கொடுத்தனர். ஆனால் கொரோனா வைரஸ் பரவலுக்கு பிறகு உலக நாடுகளே பொருளாதாரத்தில் தத்தளித்து வருகிறது. இதன் எதிரொலியாக பல நாடுகளில் தொழிற்சாலைகள்,கம்ப்யூட்டர் நிறுவனங்களில் பணியாற்றிய பலர், வேலை இழந்துள்ளனர்.இதனால் அமெரிக்கா,துபாய்,லண்டன் உள்பட பல நாடுகளிலிருந்து லட்சக்கணக்கானோர் இந்தியாவுக்கு வர ஆயத்தமாக உள்ளனர்.மீதமுள்ளவர்களுக்கும் வேலைவாய்ப்பு உத்தரவாதம் இல்லாமல் உள்ளது. இதனால் வெளிநாட்டு மாப்பிள்ளைகளுக்கு பெண் தரலாமா? வேண்டாமா? என்ற யோசனையில் பெரும்பாலான பெற்றோர் உள்ளனர்.

அட்வான்ஸ் கேள்விக்குறி
வெளிநாடுகளில் வசிப்பவர்கள் அவர்கள் சொந்த ஊரில் திருமணம் செய்யும்போது, அந்த ஊரில் இருக்கும் மிகப்பெரிய திருமண மண்டபங்களை புக் செய்வார்கள்.  உற்றார், உறவினர்கள், அக்கம், பக்கத்தினர்,நண்பர்கள் என ஆயிரக்கணக்கானோருக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்து ஆடம்பரமாக திருமணம் செய்வார்கள்.இதுபோன்ற திருமணங்களில் 20 முதல் 30 வகையான உணவுகளும் பரிமாறப்படும். இந்த வகையில் பலர் திருமண மண்டபங்களை புக் செய்து அழைப்பிதழ்கள், சமையல், மண்டப அலங்காரம் என்று அனைத்திற்கும் ஆர்டர் கொடுத்துள்ளனர்.ஆனால் உரிய நேரத்தில் திருமணம் நடக்காததால் மண்டபம் உள்ளிட்ட அனைத்திற்கும் கொடுத்த அட்வான்ஸ் திரும்ப கிடைக்குமா?என்பது கேள்விக்குறியாக உள்ளது. 


Tags : airlines ,Corona Marriages ,agencies , Thousands, marriages ,halted , foreign airlines failing
× RELATED பயணிகள் குறைவு: 2 இலங்கை விமானங்கள் ரத்து