×

சளி மாதிரி கொடுத்த மறுநாளே கடை அமைத்த வியாபாரிகள் கோயம்பேடாக மாறுகிறதா வடசேரி சந்தை?

* காய்கறி, பழங்கள் வாங்கி சென்ற மக்கள் பீதியில் தவிப்பு

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தின் பெரிய காய்கறி சந்தையான வடசேரி கனகமூலம் சந்தையில் 200க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் உள்ளன. திண்டுக்கல், மதுரை, தேனி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்படும். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக, வடசேரி காய்கறி சந்தை மூடப்பட்டு, பஸ் நிலையத்தில் தற்காலிக சந்தை செயல்படுகிறது. இந்த நிலையில் இந்த சந்தையில் வியாபாரம் செய்யும் கேசவன்புத்தன்துறையை சேர்ந்த வாலிபருக்கு ெகாரோனா உறுதியானது. இதையடுத்து மற்ற காய்கறி வியாபாரிகளுக்கு பரிசோதனை நடந்தது. முதல் நாள் நடந்த சளி பரிசோதனையில் 8 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து பஸ் நிலையத்தில் இயங்கிய தற்காலிக சந்தை மூடப்பட்டது. அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளித்தனர். வியாபாரிகள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு சளி பரிசோதனை நடந்தது. 2ம் கட்டமாக 203 பேருக்கு சளி பரிசோதனை நடத்தினர். 3ம்  கட்டமாக நேற்று 50 பேருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சளி மாதிரி கொடுத்த வியாபாரிகள் சிலர், சந்தை மூடப்பட்டதால் வடசேரி அண்ணா சிலைக்கு வலதுபுறம் உள்ள இடத்தில் பழ கடைகளை வைத்தனர். பெண்கள் சிலர் கீரைகளை விற்பனை செய்தனர். இது பற்றி மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் அங்கு வந்தனர். நீங்கள் சளி மாதிரி கொடுத்து உள்ளீர்கள். பரிசோதனை  முடிவு வராத நிலையில், இப்படி ரோட்டோரத்தில் கடையை திறந்தால், உங்களுக்கு கொரோனா இருந்தால் உங்களிடம் பழங்கள் வாங்கி செல்லும் அனைவருக்கும் கொரோனா வந்து விடும். எனவே உடனடியாக கடைகளை காலி செய்யுங்கள் என்றார்.
அப்போது வியாபாரிகள் சிலர், எங்களுக்கு ஒன்றும் வராது. நாங்கள் பிழைப்பு நடத்த வேண்டாமா? என்றனர். அப்போது மாநகராட்சி பணியாளர்கள், இன்னொரு கோயம்பேடாக வடசேரியை மாற்றி விடாதீர்கள். தயவு செய்து ஒத்துழைப்பு தாருங்கள். இரு நாட்கள் பிழைப்பு போய் விடும் என கூறி ஏராளமானவர்களின் உயிரை காவு வாங்கி விடாதீர்கள். பரிசோதனை முடிவு வரும் வரை யாரும் வியாபாரம் செய்யக்கூடாது. அப்படியே பரிசோதனை முடிவு நெகட்டிவ் என வந்தாலும் ஆணையர் உத்தரவிட்ட பிறகே, கடைகளை அமைக்க வேண்டும். உங்கள் இஷ்டத்துக்கு கடைகளை நடத்த கூடாது என்றனர்.

 இதையடுத்து அங்கிருந்த வியாபாரிகள் கலைந்து சென்றனர். வடசேரி காய்கறி சந்தையில் கடந்த 10 தினங்களுக்கு முன், காய்கறிகள் மற்றும் பொருட்கள் வாங்க வந்தவர்கள் தாங்களாகவே முன் வந்து சளி பரிசோதனை செய்ய வேண்டும் என மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து வடசேரி தற்காலிக காய்கறி சந்தைக்கு மக்கள் வந்து சென்றனர். கடந்த 30ம்தேதி வரை அரசு பஸ்களும் வடசேரியில் இருந்து தான் இயங்கின. இந்த நிலையில் வடசேரி சந்தை காய்கறி வியாபாரிகளை கொரோனா தாக்கியது, பொதுமக்களையும் பீதி அடைய செய்துள்ளது. நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள அப்டா மார்க்ெகட்டில், சுமை தூக்கும் தொழிலாளி உள்பட 2 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதையடுத்து தற்போது அப்டா மார்க்கெட்டில் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணியுடன் வியாபாரம் நிறுத்தப்படுகிறது. அனைத்து வியாபாரிகளும் முக கவசம் அணிய வேண்டும். கையுறை அணிந்து காய்கறிகளை சப்ளை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியதன் பேரில், காய்கறி வியாபாரிகள் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

உயிர் பயத்தால் குவிந்த வியாபாரிகள்
கொரோனா பரவிய  கால கட்டத்தில் இருந்தே வடசேரி வியாபாரிகள் சளி பரிசோதனை செய்து ெகாள்ள வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. வடசேரியில் உள்ள நகர சுகாதார மையத்தில் சளி மாதிரி எடுக்கப்பட்டது. அப்போது பெரும்பாலான வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை. தற்போது 9 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வடசேரியில் உள்ள வியாபாரிகள், தொழிலாளர்கள், கடை, ஓட்டல் நடத்துபவர்கள் சளி மாதிரி எடுக்க குவிந்தனர். தங்களுக்கும் பாதிப்பு இருக்குமோ? என்ற அச்சத்துடன் சளி மாதிரி கொடுத்தனர். பரீட்சை ரிசல்ட்டுக்கு முதல் நாள் இருப்பது போல் பீதியாக இருக்கிறது என்று வியாபாரிகள் கூறினர்.

வடசேரி சந்தையில் தனி இடம் ஒதுக்க வேண்டும்
வியாபாரிகள் சிலர் கூறுகையில், அனைவருக்கும் பரிசோதனை முடிவு வந்ததும், வடசேரி சந்தையில் காலியாக உள்ள இடத்தில் வியாபாரம் நடத்த அனுமதிக்க வேண்டும். சந்தைக்கு வரும் வியாபாரிகள், பொதுமக்களுக்கு கிருமி நாசினி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது சந்தை மூடப்பட்டு வியாபாரம் முடங்கி உள்ளது. 3 மாதங்களுக்கு மேல் வியாபாரம் இல்லை. பஸ் நிலைய தற்காலிக சந்தையில் திருட்டுகளும் நடந்து வருகின்றன என்றனர்.

Tags : merchants , Vadaseri market,go-to market , next day, sample mucus?
× RELATED தடையால் வெறிச்சோடிய குந்தாரப்பள்ளி வாரச்சந்தை