×

பாம்பன் தூக்குப்பாலத்தில் விசைப்படகு மீண்டும் மோதல் : பராமரிப்பு பணி ஊழியர்கள் அதிர்ச்சி

ராமேஸ்வரம்: பாம்பன் ரயில் பாலத்தில் நேற்றும் விசைப்படகு மோதியதால், ரயில்வே ஊழியர்கள் பதற்றமடைந்தனர். பாக்ஜலசந்தி கடல் வழியாக ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடல் பகுதிக்கு வந்த நான்கு இழுவை கப்பல்கள் ரயில் பாலத்தை கடந்து, மன்னார் வளைகுடா செல்வதற்காக வடக்கு கடல் பகுதியில் காத்திருந்தன. இதுபோல் ஏராளமான மீன்பிடி விசைப்படகுகளும் வடக்கு கடல் பகுதியில் இருந்து, தெற்கு கடல் பகுதிக்கு செல்ல நின்றிருந்தன. இதனால் நேற்று பாம்பன் தூக்குப்பாலம் திறக்கப்பட்டது. தொடர்ந்து விசைப்படகுகள் பாலத்தை கடந்து கால்வாய் வழியாக செல்லத் துவங்கின. விசைப்படகுகள் ஒன்றுக்கொன்று முந்தி சென்றபோது, ஒரு விசைப்படகு தூக்குப்பாலத்தின் அடிப்பகுதியில் மோதியதில் பெரும் சப்தம் ஏற்பட்டது. இதனால் பாலத்தில் பணியில் இருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மோதிய படகும் பாலத்தை கடந்து சென்று விட்டது. பதற்றமடைந்த ரயில்வே ஊழியர்கள் அனைத்து படகுகளையும் நிறுத்தி வைத்து பாலத்தை ஆய்வு செய்தனர்.

பின்னர் 20 நிமிடங்களுக்கு பிறகு மீன்பிடி படகுகள் அனைத்தும் வரிசையாக செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒவ்வொரு படகாக தூக்குப்பாலத்தை கடந்து பாம்பன் தென்கடல் பகுதிக்கு சென்றன. தொடர்ந்து 4 இழுவை கப்பல்கள், ஒன்றன்பின் ஒன்றாக பாம்பன் பாலத்தை கடந்து மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு சென்றது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவில் கடலில் புதிய பாலம் கட்டுவதற்கு ஆய்வு செய்து விட்டு திரும்பிய விசைப்படகு பாம்பன் தூக்குப்பாலத்தின் அடிப்பகுதியில் மோதியது. நேற்றும் பாலத்தின் அடிப்பகுதியில் விசைப்படகு மோதிய சம்பவம் நடைபெற்றது ஊழியர்கள், மக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாலத்தில் பணியாற்றும் ஊழியர்களின் கவனக்குறைவே இதற்கு காரணம். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால் கப்பல்கள் செல்வதற்காக தூக்குப்பாலத்தை திறந்து மூடும்போது, ஊழியர்கள் மிகுந்த கவனமுடன் செயல்பட ரயில்வே உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : maintenance staff ,Pompeen ,Paxman ,conflict , Paxman gallows, conflict, staff shock
× RELATED கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை...