×

பழநி அருகே ஆயக்குடியில் 3 ஆயிரம் ஆண்டு கல்திட்டை கண்டுபிடிப்பு: தமிழர்களின் 7 பிறப்பு நம்பிக்கையை குறிப்பதாக கருத்து

பழநி: பழநி அருகே ஆயக்குடியில் தமிழர்களின் 7 பிறப்பு நம்பிக்கையை குறிக்கும் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல்திட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே, ஆயக்குடியில் உள்ள ஆமைக்கரட்டில் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, முன்னாள் எம்பி ராஜாரவிவர்மா, பழநியாண்டவர் கல்லூரி பண்பாட்டுத்துறை பேராசிரியர் அசோகன் உள்ளிட்டோர் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 3 ஆயிரம் ஆண்டு பழமையான கல்திட்டை கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது: ஆயக்குடி அருகே, ஆமைக்கரடு பகுதியில் 3 ஆயிரம் ஆண்டு பழமையான கல்திட்டைகள் காணப்படுகின்றன. இவை, இப்பகுதியை ஆண்ட சங்ககால ஆய்வேளிர் அரசர்களின் நினைவிடங்கள் என கண்டறியப்பட்டன. கடையேழு வள்ளல்களில் ஒருவரான ஆய் ஆண்டிரன் வழியினரின் நினைவிடங்கள் இவை. ஆமைக்கரடின் தெற்குப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட புதிய கல்லமைப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. பாறையின் மேற்புறத்தில் உருண்டை வடிவிலான கல்லை வைத்து, அதற்கு மேல் ஒரு தேங்காய் அளவிலான கல் வைக்கப்பட்டுள்ளது. இதன் மேல் மேலும் ஒரு உருண்டை வடிவிலான கல் வைக்கப்பட்டுள்ளது. இந்த தேங்காய் அளவிலான கல், இரண்டு உருண்டைக் கற்களுக்கு நடுவில் சொருகி வைத்ததைப்போல் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு சுமார் 4 அடி உயரம் உள்ளது. மேலே உள்ள உருண்டைக் கல் 7 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டதற்கான அடையாளத்தை காண முடிகிறது. அதேபோல் இந்த கல்திட்டைகளில் உள்ள ஒரு பலகைக் கல்லில் 7 x 7 கட்டங்களாக மொத்தம் 49 கட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டங்கள் தமிழர்களின் ஏழு பிறப்பு நம்பிக்கையை குறிப்பதாக கொள்ளலாம். இந்த நம்பிக்கையை திருவள்ளுவர், அப்பர், சுந்தரமூர்த்தி நாயனார், ஆண்டாள் ஆகியோர் தத்தமது பாடல்களில் பதிவு செய்துள்ளனர். பைபிளில் இந்த 49 என்பது முக்தி அல்லது விடுதலையின் எண்ணாக கருதப்படுகிறது. பொதுவாக இஸ்லாம், யூத மதங்கள் தவிர்த்த உலகின் ஏனைய மதங்கள் மறுபிறப்பை நம்புகின்றன. சைவ, வைணவ, சமண, புத்த மதங்கள் மறுபிறப்பு கொள்கையுடையவை. இக்கட்டங்கள் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழந்தமிழர்களின் ஏழு பிறப்பு மற்றும் மறுபிறப்பு நம்பிக்கையை குறிப்பதாகக் கருதலாம். இதுதொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Discovery ,Palani Palani ,Ayakudi ,Ayakkudy , Thousand Years , Discovery, Ayakkudy, Palani
× RELATED வட இந்தியர்களின் வரவை ஆதரிக்கும் படமா: பாஸ்கர் சக்தி பதில்