×

காவல்துறை மீதான புகார்களை விசாரிக்க போலீசாரையே நியமிப்பதா? கமல்ஹாசன் கேள்வி

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கை:
சாத்தான்குளம் போலீஸ் அராஜகம் ஒற்றை நிகழ்வல்ல. தோண்டத் தோண்ட வெளிவரும் குற்றங்கள், ஒரு காவல் நிலையத்தில் இத்தனை தவறுகள் என்றால் தமிழகம் முழுவதும் நிலை என்னவாயிருக்கும் என்ற கேள்விகளை எழுப்புகிறது. தமிழகத்தில் காவல்துறை விசாரணை என்ற பெயரில் அத்துமீறுவதும், காவல்துறையை எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் தாக்கப்படுவதும், சிறைச்சாலை மரணங்களும் நடந்தேறிக் கொண்டேயிருக்கிறது. காவல்துறையின் கண்காணிப்பில் நிகழும் மரணங்கள், இந்தியா முழுவதும் நடக்கும் பெருங்குற்றம். அதில் தமிழகம் இவ்வகை மனித உரிமை மீறல் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது என்பது வருந்தத்தக்க விஷயம்.

மக்கள் நீதி மய்யம், மக்கள் பாதுகாப்பினை அச்சுறுத்தும் இந்தத் தவற்றினை வேரோடு அகற்றிட முயற்சிகளை தொடங்கியிருக்கிறது. இதன் முதல் கட்டமாக, காவல் துறையின் சீரமைப்பை உண்மையாகவும், நேர்மையாகவும் செயல்படுத்திட சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கை பதிவு செய்திருக்கிறோம். உச்ச நீதிமன்றம் காவல் துறையின் அதிகாரத்தை கண்காணித்திடவும், அதிகரிக்கும் பணி அழுத்தம் அவர்களை பாதிக்காமல் மக்கள் பணியாற்றிட செய்யும் வகையில் பலமுறை திட்டங்களையும், வழிமுறைகளையும் வழங்கியிருக்கிறது. அந்த வழிமுறைகளை தமிழக அரசு பின்பற்றிட நீதிமன்றம் உத்தரவிடவும், கண்காணிக்கவும் வேண்டி இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு மாநிலமும், காவல் துறையினரின் தவறுகளையும் அத்துமீறல்களையும் குறித்து, பொதுமக்கள் புகாரளிக்க ஏதுவாக, காவல்துறை புகார் அமைப்பினை அமைத்து அதை முறையாக செயல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் தமிழக அரசு பெயருக்கு அமைத்துள்ள மாநில அளவிலான அமைப்பில் காவல் அதிகாரிகளே அந்த புகார்களை விசாரிக்கும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது தமிழக அரசு நீதிமன்ற உத்தரவையும் மதிக்கவில்லை, மக்களின் உயிரையும் மதிக்கவில்லை என்பதை தெளிவாக்குகிறது.


Tags : policemen , Police, Complaint, Investigation, Police? Kamal Haasan Question
× RELATED திருவாரூர் ஆழித்தேரோட்டத்திற்கு 2000 போலீசார் பாதுகாப்பு