×

சூடான், கிர்கிஸ்தான், ஓமன், குவைத்தில் தவித்த மருத்துவ மாணவர்கள் உட்பட 559 பேர் சென்னை வருகை

சென்னை:  சூடான், கிர்கிஸ்தான், ஓமன், குவைத்தில் சிக்கித்தவித்த மருத்துவ மாணவர்கள் உட்பட 559 பேர் சென்னை திரும்பினர். கொரோனா ஊரடங்கில் வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில் கிர்கிஸ்தான் நாட்டில் இருந்து ஏர்இந்தியா சிறப்பு மீட்பு விமானம் நேற்றுமுன்தினம் இரவு 167 பேருடன் சென்னை வந்தது. அவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவக்கல்லூரி மாணவர்கள். 106 ஆண்கள், 61 பெண்கள் வந்தனர். இவர்களில் 61 பேர் இலவச தங்குமிடமான தண்டலம் தனியார் கல்லூரி விடுதிக்கும், 106 பேர் சென்னை நகரில் உள்ள தனியார் ஓட்டலுக்கும் அனுப்பப்பட்டனர்.

சூடானில் இருந்து 43 பேருடன் ஏர்இந்தியா சிறப்பு விமானம் நேற்றுமுன்தினம் இரவு சென்னை வந்தது. அதில் 37 ஆண்கள், 4 பெண்கள், 2 சிறுவர்கள் வந்தனர். அனைவரும் சென்னை நகரில் உள்ள தனியார் ஓட்டலுக்கு அனுப்பப்பட்டனர்.  
மஸ்கட்டில் இருந்து 180 பேருடன் ஏர்இந்தியா சிறப்பு விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை வந்தது. அதில், 142 ஆண்கள், 30 பெண்கள், 8 சிறுவர்கள் வந்தனர். சென்னை நகரில் உள்ள தனியார் ஓட்டலுக்கு அனுப்பப்பட்டனர். விமானங்களில் வந்த அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, 14 நாட்கள் தனிமைப்படுத்தும் மையங்களுக்கு அனுப்பப்பட்டனர். குவைத்தில் இருந்து தனியார் சிறப்பு விமானம் நேற்று அதிகாலை 169 பேருடன் சென்னை வந்தது. அனைவரும் குவைத் தனியார் தொழிற்சாலை பணியாளர்கள். அந்த நிறுவனமே அரசின் அனுமதி பெற்று அழைத்து வந்துள்ளது. அனைவரும் சென்னையில் உள்ள ஓட்டல்களுக்கு கட்டணம் செலுத்தி 14 நாட்கள் தங்கவைக்க அழைத்து செல்லப்பட்டனர். அங்கு தனியார் மருத்துவ குழுவினர் மருத்துவ பரிசோதனை செய்வார்கள்.

Tags : Kuwait ,Sudan ,Kyrgyzstan ,Oman ,Chennai. 559 ,Chennai , Sudan, Kyrgyzstan, Oman, Kuwait, needy medical students, 559 visit Chennai
× RELATED 128 மாணவர்களுக்கு கல்வி உதவிதொகை