×

குறட்டை விடுபவர்களுக்கு கொரோனாவால் அதிக ஆபத்தா? டாக்டர் விளக்கம்

சென்னை: குறட்டை விடுபவர்களுக்கு கொரோனாவால் அதிக ஆபத்து ஏற்படுமா என்பது குறித்து காது, மூக்கு, தொண்டை நிபுணர் டாக்டர் அருளீஸ்வரன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து காது, மூக்கு, தொண்டை நிபுணர் டாக்டர் அருளீஸ்வரன் கூறியதாவது: கொரோனா வேகமாக பரவி வருகிறது. எப்படி, யார் யாருக்கு பரவுகிறது, ஆபத்தை ஏற்படுத்துகிறது என்று தெரியாமல், மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். முக்கியமாக கொரோனா மூச்சு திணறல் ஏற்படுத்தி, நுரையீரலில் பாதிப்பு ஏற்படுத்துகிறது. இதனால் குறட்டை விடுபவர்கள், குறட்டை எதனால் ஏற்படுகிறது, குறட்டை வருபவர்களுக்கு கொரோனா பாதிப்பால் ஏதேனும் அதிகப்படியான பாதிப்பு ஏற்படுமா, நுரையீரல் பிரச்னையால் தான் குறட்டை வருகிறதா என்று குழப்பத்திலும் அதிர்ச்சியிலும் உள்ளனர்.

குறட்டை என்பது குரல் நாளத்திற்கு மேற்பகுதியில் ஏற்பட கூடிய ஒன்று. நாக்கு தடிமனாக இருப்பதாலும், உடல் பருமனாக இருப்பதாலும், மூக்கு தண்டு வளர்ந்து இருப்பதாலும் என இதுபோன்ற காரணங்களால் குறட்டை ஏற்படுகிறது.எனவே குறட்டைக்கும், நுரையீரலுக்கும் எந்த தொடர்புமில்லை. இதனால் கொரோனா வந்தால் நமக்கு சிக்கல் ஏற்படுமோ என்று அச்சப்படும், குறட்டை விடுபவர்கள் அச்சம் கொள்ள வேண்டாம். குறட்டை விடுபவர்களுக்கு கொரோனா வந்தால் அதிக ஆபத்து வரும் என்பது சாத்தியமில்லை. மேலும் சர்க்கரை நோய், கேன்சர் போன்ற பக்க நோய்கள் உள்ளவர்களுக்கு தான் பிரச்னை ஏற்படும்.

ஆனால் பொதுவாக குறட்டை விடுபவர்களுக்கு நரம்பு பிரச்னைகள், ரத்த கொதிப்பு அதிகமாகுவது என பல பிரச்னைகள் வரும். மேலும், மூளைக்கு ஓய்வு கிடைக்காது. பொதுவாக தூங்கும் போது மூளைக்கு ஓய்வு கிடைக்கும் என்று கூறுவார்கள். ஆனால் குறட்டை விடுபவர்களுக்கு மூளைக்கான ஓய்வு கிடைப்பதில்லை. உதாரணமாக வயதிற்கு ஏற்றபடி ஒருவருக்கு உறக்கம் என்பது மிகவும் முக்கியமானது, ஆனால் குறட்டை விடுபவர்களுக்கு அது கிடைப்பதில்லை. குறட்டை விடுபவர்களின் மூளை விழித்துக்கொள்ளும், இதனால் வேலை நேரங்களில் தூங்குவார்கள், குழந்தைகளுக்கு படிக்கும் திறன் குறையும் இதைப்போன்று பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்.

எனவே குறட்டை விடுபவர்கள் பிரச்சனையை சரி செய்துகொள்ள வேண்டும். அதற்கு சிகிச்சை பெற குறட்டை எப்படி உருவாகிறது என்பதை கண்டறிய வேண்டும். உடல் பருமனால் வந்தால், சிலீப் எண்டோஸ்கோபி செய்ய வேண்டும். அந்த நபரை உறங்க வைத்து எந்த இடத்தில் அடைப்பு ஏற்படுகிறது என்பதை அறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். நாக்கு தடிமனாக இருந்தால் அதற்கேற்ற சிகிச்சை அளிக்க வேண்டும். உடனே குணமாக்கினால் ரத்த கொதிப்பு, நரம்பு பிரச்னைகளை தவிர்க்கலாம். மேலும் குறட்டை விடுபவர்கள் தமக்கு கொரோனாவால் ஆபத்து ஏற்படும் என்று அச்சம் கொள்ள வேண்டாம். இவ்வாறு கூறினார்.

Tags : Coroners ,Doctor , Snorer, Corona, High Risk ?, Doctor Explanation
× RELATED நோயாளி இறந்தால் டாக்டருக்கு 5 ஆண்டு...