×

அரும்பாக்கம் பகுதியில் மருந்து வாங்க சென்ற வாலிபர் தாக்கப்பட்டாரா? போலீசார் விளக்கம்

சென்னை: மாத்திரை வாங்க மொபட்டில் வந்த வாலிபரை போலீசார் தாக்கிய விவகாரம் தொடர்பாக போலீசார் புதிய வீடியோ வெளியிட்டுள்ளனர். கடந்த 29ம் தேதி சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த ராஜா முகமது (25), அரும்பாக்கம், எம்எம்டிஏ காலனியில் உள்ள மருந்து கடையில் மாத்திரை வாங்க வந்தார். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த அண்ணா நகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் கண்ணன் வாகனத்தை பறிமுதல் செய்தார். இதனால் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், தனது சகோதரன் சதாம் உசேனை வரவழைத்து தகராறு செய்தார். எனவே, சதாம் உசேனை போலீசார் இழுத்து சென்று வாகனத்தில் ஏற்றிச் செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த சம்பவம் குறித்து மனித உரிமை ஆணையமும் தானாக முன்வந்து விசாரணை செய்தது.

இந்நிலையில் இதுதொடர்பாக ஒரு வீடியோ ஒன்றை நேற்று போலீஸ் வெளியிட்டது. அதில் போலீசார் மடக்கிய பின்பு, தன்னை மட்டும் எப்படி மடக்கி சோதனை போடலாம் என்று சதாம் உசேன் கேள்வி எழுப்பியுள்ளார். பின்னர் சாலையில் சென்ற வாகனங்களின் முன்பு நின்று அந்த வாகனங்களையும் பறிமுதல் செய்யும்படி கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர்கள் எல்லாம் மருத்துவர்கள், அரசு பணிக்கு செல்பவர்கள் என போலீசார் தெரிவித்தும் விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவரை அழைத்து செல்ல முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளரிடம் போலீசார் கூறுகையில், ‘கடந்த 29ம் தேதி நடந்த சம்பவத்தில் ஊரடங்கு மீறி வாகனத்தில் வந்த ராஜாமுகமது வாகனத்தை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து அவருடைய வாகனத்தையும் அவரையும் விடுதலை செய்தோம். அதன் பிறகு நடந்தது என்ன? ராஜாமுகமது தம்பி சதாம் உசேன் ஆய்வாளரிடம் தகராறு செய்து விட்டு அப்பகுதியில் செல்லும் வாகனங்களை மடக்கி தகராறு செய்ததால் அவரை வாகனத்தில் ஏற்றும் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது’ என்றனர்.

Tags : area ,Arumbakkam , Arumbakkam Area, Drug, Youth, Attacked ?, Police Explanation
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...