×

ஈரோட்டில் கட்டி முடித்து ஒரு ஆண்டாக பூட்டி கிடக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு: பயனாளிகளுக்கு ஒதுக்க கோரிக்கை

ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையத்தில் அழகரசன் நகரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்டு கடந்த ஓராண்டாக பூட்டியே கிடக்கிறது. இதை உரிய பயனாளிகளுக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பாக ஓடைப்பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்காக அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. அதன்படி ஈரோடு கருங்கல்பாளையம் அழகரசன் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. ஆனால் இந்த வீடுகள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் பழுதடைந்த நிலையில் இருந்தது. இதனால் அந்த வீடுகளை இடித்து விட்டு புதியதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்ட முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கடந்த 2017ம் ஆண்டு 180 வீடுகள் கொண்ட 9 அடுக்குகள் கொண்ட குடியிருப்பும், 92 வீடுகள் கொண்ட தரைதளத்துடன் கூடிய 3 அடுக்குகள் கொண்ட குடியிருப்பும் கட்ட ரூ.99.09 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியது. இந்த பணிகளை 2019ம்ஆண்டு மே மாதம் முடிக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்துடன் கட்டுமான பணிகள் தொடங்கியது. கடந்த ஆண்டு மே மாதம் பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் மின் இணைப்புகள் வழங்காததால் வீடுகள் ஒதுக்கீடு செய்யவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு பிறகு புதியதாக டிரான்ஸ்பார்மர் அமைத்து மின் இணைப்புகள் கொடுத்துள்ளனர்.

இந்த வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டுகள் ஆனநிலையில் இதுவரை பயனாளிகளுக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால் ஏற்கனவே இங்கு குடியிருந்தவர்கள் வாடகை வீட்டில் சிரமப்பட்டு வசித்து வருகிறார்கள். உரிய பயனாளிகளுக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கிறார்கள். இது குறித்து பயனாளிகள் கூறுகையில், இந்த அடுக்குமாடி குடியிருப்பை கட்டி முடித்து ஓராண்டு ஆன நிலையில் இதுவரை வீடுகளை ஒதுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இந்த குடியிருப்பிற்கு பிறகு கட்டப்பட்ட பெரியார் நகர் குடியிருப்பில் வீடுகளை ஒதுக்கி பயனாளிகளுக்கு கொடுத்துள்ளனர்.

ஆனால் எங்களுக்கு மட்டும் ஏன் இதுவரை வீடுகளை ஒதுக்கவில்லை என தெரியவில்லை. தற்போது கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலையில்லாமல் வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியாத நிலையில் இருந்து வருகிறோம். இந்த சூழ்நிலையிலாவது எங்களுக்கு வீடுகளை ஒதுக்கி தர வேண்டும் என்றனர்.Tags : Erode ,Cottage Transition Board Residency , Erode, cottage replacement board residence
× RELATED ஈரோடு மருந்தகத்தில் வாங்கிய...