×

சென்னை உயர்நீதிமன்றத்தில் வரும் 6ம் தேதி முதல் காணொலி மூலம் மட்டுமே வழக்கு விசாரணை நடைபெறும்: நீதிபதிகள் கூட்டத்தில் முடிவு!

சென்னை: கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வரும் 6ம் தேதி முதல் அனைத்து வழக்குகளும் காணொலி காட்சி வாயிலாகவே விசாரிக்கப்படும் என நீதிபதிகள் மட்டத்திலான கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலமாகவே அரசின் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை ஒருசில நீதிபதிகள் விசாரித்து வருகிறார்கள். இந்த நிலையில் வருகின்ற 6ம் தேதி ஊரடங்குகள் தளர்த்தப்பட உள்ளதன் காரணமாக உயர்நீதிமன்றத்தை திறந்து நேரடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு பார் கவுன்சில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் தலைமை நீதிபதிக்கு கோரிக்கை வைத்தனர்.

இது தொடர்பாக தீர்மானங்களும் நிறைவேற்றி தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்திருந்தனர். இதையடுத்து இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி தலைமையில் அனைத்து நீதிபதிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருகின்ற 6ம் தேதி முதல் உயர்நீதிமன்றத்தை திறந்து நேரடியாக வழக்கு விசாரணை நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. ஆனால் ஒருசில நீதிபதிகள், நேரடியாக வழக்கு விசாரணை நடத்துவதன் மூலம் கொரோனா தொற்று மேலும் பரவும் அபாயம் உள்ளதாக தெரிவித்ததை அடுத்து, தற்போது 6ம் தேதி முதல் ஏற்கனவே பின்பற்றப்படுத்தப்பட்டிருந்த வீடியோ கான்பரன்ஸ் என்ற நடைமுறையை பின்பற்றி வழக்கை விசாரிப்பது என முடிவு செய்துள்ளனர்.

தற்போது ஒருசில நீதிபதிகள் மட்டுமே விசாரித்து வந்த நிலையில், வருகின்ற 6ம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள அனைத்து நீதிபதிகளும், அவரவருக்கு ஒதுக்கப்பட்ட வழக்குகளை அவர்களது வீடுகளில் இருந்தோ அல்லது உயர்நீதிமன்றம் வந்தோ வழக்கை விசாரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் உயர்நீதிமன்ற பணியாளர்களை பொறுத்தவரையில் 33 சதவீதம் என்பது இனி 50 சதவீதமாக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை காலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Madras High Court ,Judges ,meeting ,High Court ,Chennai , Madras High Court, Video, Inquiry, Judges Meeting
× RELATED விவிபேட் சீட்டு வழக்கு: விசாரணைக்கு ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு