லடாக்கின் சீன எல்லையோரத்திற்கு பிரதமர் மோடி பயணம் : மோதலை தூண்டும் செயல்களில் எந்த தரப்பும் ஈடுபட கூடாது என சீனா கண்டனம்!!

பெய்ஜிங் : லடாக்கில் இந்திய ராணுவ நிலைகளை பார்வையிட சென்ற மோடிக்கு சீனா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷாவோ லிஜியன் பிரதமர் மோடியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சூழ்நிலையை மோசமாக்கும் எந்த நடவடிக்கையிலும் எந்த தரப்பும் ஈடுபட கூடாது என்று அவர் கூறியிருக்கிறார். இந்தியாவும் சீனாவும் தற்போதைய பதற்றமான சூழ்நிலையை குளிர்வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

பதற்றத்தை குறைக்கும் நடவடிக்கைகளில் இரு நாடுகளும் ஈடுபட்டு இருக்கும் போது, சூழலை மோசமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். ஆனால் மோடியின் பெயரையோ அவரது லடாக் பயணத்தையே குறிப்பிடாமல் பொதுப்படையாக இந்த கருத்தை சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷாவோ லிஜியன் தெரிவித்து இருக்கிறார். கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த மாதம் 15ம் தேதி நடைபெற்ற மோதலில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சீன ராணுவத்தினர் லடாக் எல்லைப் பகுதியில் அத்துமீறும் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி எந்த முன்னறிவிப்புமின்றி லடாக் பகுதிக்கு இன்று விரைந்தார். நிம்மு ராணுவ முகாம் பகுதியில் ராணுவ அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்.

Related Stories:

>