தூத்துக்குடியில் காதல் திருமணத்தால் நேர்ந்த கொடூர சம்பவம்: மணமகனின் தாயார் உள்பட 2 பேர் வெட்டிக்கொலை...தலைமறைவான குற்றவாளிகள்..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மணமகனின் தாயார் மற்றும் நண்பரை வெட்டிக் கொலை செய்த மணமகள் வீட்டைச் சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகில் வசித்து வருபவர் லட்சுமணன் என்பவர், இவரது 21 வயதான மகன் விக்னேஷ் என்பவர் அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரது மகள் சங்கீதாவும் காதலித்து வந்த நிலையில், இருவரும் கடந்த 20 நாட்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் இவர்களின் திருமணத்திற்கு சங்கீதாவின் அண்ணன் முத்துராமலிங்க ராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும், இதனால் இரு குடும்பத்திற்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு இரு தரப்பினருக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இந்தப் பேச்சு வார்த்தை வாக்குவாதத்தில் முடிந்த நிலையில், ஆத்திரம் அடைந்த முத்துராமலிங்க ராஜா, அவரது சித்தப்பா மகன் முத்துச்சுடர் மற்றும் அவர்களது நண்பர் அருணாச்சலம் ஆகிய 3 பேரும் விக்னேஷ், அவரது தந்தை லட்சுமணன், விக்னேஷின் நண்பர் அருண் ஆகிய 3 பேரையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனைப் பார்த்த அதிர்ச்சியடைந்த விக்னேஷின் தாயார் முத்துப்பேச்சி அதனைத் தடுக்க முயன்றுள்ளார். ஆனால் அவர்கள் அவரை வெட்டி விட்டனர்.

இந்த தகராறில் முத்துப்பேச்சி மற்றும் அருண் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விக்னேஷ் மற்றும் அவரது தந்தை லட்சுமணன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் ஆய்வு நடத்தினார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவரும் ஏரல் காவல்துறையினர், தலைமறைவாக உள்ள முத்துராமலிங்க ராஜா, முத்துச்சுடர், மற்றும் அருணாச்சலம் ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.

Related Stories:

>